செய்திகள்

இலவச சட்ட உதவிகளை பெறுவது எப்படி?: பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி நீதிபதிகள் விளக்கம்

Published On 2016-11-02 10:12 GMT   |   Update On 2016-11-02 10:13 GMT
இலவச சட்ட உதவிகளை பெறுவது எப்படி என்பது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
சென்னை:

நீதிமன்றங்களில் வழக்கு நடத்த வக்கீல்களுக்கு பணம் கொடுக்க முடியாத பொதுமக்களுக்கு இலவச சட்ட உதவிகளை தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுவும் செய்து வருகிறது.

இந்த சட்ட உதவிகளை எப்படி பெறுவது என்று பொதுமக்கள் பலருக்கு தெரியவில்லை. இதையடுத்து, யார் யாரெல்லாம் இந்த இலவச சட்ட உதவிகளை பெற முடியும்? என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்க மாநில சட்டப்பணி ஆணைக்குழு முடிவு செய்தது.

இதன்படி தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு வரும் பொதுமக்களுக்கும், அரசு அலுவலகங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வந்து செல்லும் பொதுமக்களுக்கும் இந்த துண்டு பிரசுரங்கள் இன்று மற்றும் நாளை வழங்கப்படுகிறது. இந்த பணியை வக்கீல்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் ஆகியோர் மூலம் பொதுமக்கள் மத்தியில் விநியோகம் செய்யப்படுகின்றன.

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டுகளுக்கு வந்த பொதுமக்களுக்கு, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி நஷீர்அகமது, சென்னை மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர் நீதிபதி சுதா, சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளர் ரிஷி ரோ‌ஷன் ஆகியோர் துண்டு பிரசுரங்களை இன்று காலையில் வழங்கினார்கள். பின்னர், இலவச சட்ட உதவிகளை எப்படி பெறுவது ? என்றும் பொது மக்களுக்கு நீதிபதிகள் விளக்கிக் கூறினார்கள்.

Similar News