செய்திகள்

எடப்பாடி அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2016-10-27 10:43 GMT   |   Update On 2016-10-27 10:43 GMT
பள்ளி மாணவி வி‌ஷம் குடித்து வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி நகர பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 1500 மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளியில் எடப்பாடியை அடுத்துள்ள தேவூர் உடைச்சகரை பகுதியை சேர்ந்த ஜானகி (வயது 16) என்பவர் பிளஸ்-2 வகுப்பில் நர்சிங் பாடப்பிரிவை எடுத்து படித்து வருகிறார்.

வழக்கம் போல் இன்று காலையில் பள்ளிக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர், யாரிடமும் பேசாமல் வகுப்பறையில் அப்படியே மவுனமாக அமர்ந்திருந்தார்.

யாரிடமும் பேசாமல், ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலும், கவலையிலும் இருந்த அவர், திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஓடி வந்து, ஜானகியின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை. பாதி மயக்கத்திலேயே இருந்தார்.பாதி மயக்கத்தில் இருந்த அவரிடம் சகமாணவிகள் விசாரித்தபோது, தான் வி‌ஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனால் பயமும், பதட்டமும் அடைந்த சக மாணவிகள் உடனே ஓடிச் சென்று, இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியை வளர்மதி மற்றும் ஆசிரியைகள் விரைந்து வந்து மாணவியை மீட்டு, எடப்பாடி அரசு மருத்துவ மனையில் உடனடியாகசிகிச்சைக்காக சேர்த்தனர்.அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எடப்பாடி போலீசார் மாணவியின் தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து பெற்றோரிடமும், மாணவியின் தோழிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார் என்பது தற்போது மர்மமாகவே உள்ளது. எனவே மாணவி மயக்கம் தெளிந்த பிறகு, அவர் போலீசாரிடம் தெரிவிக்கும் தகவலின் அடிப்படையில் தான் வி‌ஷம் குடித்ததற்கு என்ன காரணம் என்பன பற்றிய முழு விபரங்களும் தெரியவரும்.

பள்ளி மாணவி வி‌ஷம் குடித்து வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News