செய்திகள்

சட்டவிதிகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு உத்தரவு

Published On 2016-10-25 02:53 GMT   |   Update On 2016-10-25 02:53 GMT
சட்டவிதிகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விருதுநகர், சிவகாசி மற்றும் இதர பகுதிகளில் சமீப காலங்களில் நிகழ்ந்த வெடி விபத்துகள் குறித்தும், பட்டாசுகளை பாதுகாப்பாக கையாளுவது குறித்தும் முன்னெச்சரிக்கை பணித்திறனாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு செயலாளர் பெ.அமுதா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் பி.போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சட்டவிதிகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்து இல்லாமல் பாதுகாப்புடன் வெடிகள் தயாரிக்க 3 சிறப்பு குழுக்கள் அமைத்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விருதுநகரில் நடமாடும் கண்காணிப்பு குழு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்டாசு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான பயிற்சி மையத்தில் மேற்பார்வையாளர்கள், ‘போர்மேன்கள்’ மற்றும் தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிலோபர் கபீல் துறை சம்பந்தமான பல்வேறு பணிகள் குறித்தும் திறனாய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News