செய்திகள்

தி.மு.க. நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டும்: கி.வீரமணி வேண்டுகோள்

Published On 2016-10-24 02:25 GMT   |   Update On 2016-10-24 02:25 GMT
தி.மு.க. நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும், பல்வேறு சங்கங்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. அதனை தமிழக அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆளும் கட்சி அந்தக் கடமையைச் செய்யத் தவறும் பட்சத்தில் அடுத்து அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது சட்டமன்ற எதிர்க்கட்சியான தி.மு.க.வைச் சார்ந்தது என்பது ஒரு சரியான, இயல்பான ஜனநாயக வழிமுறை. அந்தக் கடமையைச் செய்ய தி.மு.க. முன்வந்ததற்காக, அதனை வரவேற்பதுதான் பிரச்சினையின் மீது கவலை கொண்டவர்களின் கடமையாக இருக்க முடியும்.

சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டாலும் அதனை நிராகரிக்கும் துணிவு கர்நாடகத்துக்கு வந்ததற்கு காரணம் அம்மாநில ஒற்றுமை, சுருதிப் பேதம் காட்டாத ஒருமித்த உணர்வு. அந்தப் பலம் நமக்கு இல்லாமல் போனதுதான், தீர்ப்பு இருந்தும் அதன் பலனை நாம் அனுபவிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம்.

ஆளும் அ.தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்புக் கொடுத்துள்ளார். இது ஏதோ தி.மு.க.வுக்கு அரசியல் ஆதாயம் என்று எதற்கெடுத்தாலும் ஓட்டுக் கண்ணாடிப் போட்டுப் பார்க்காமல், தமிழ்நாட்டுக்கு ஆதாயம் என்ற கண்ணோட்டத்துடன், அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் தலைவர்களோ, பிரதிநிதிகளோ, சங்கமித்து ஒருமித்த கருத்தை எட்டி, தமிழர்களுக்கு உயிர்த் தண்ணீர் ஊற்றுமாறு அரசியலுக்கு அப்பாற்பட்ட திராவிடர் கழகம் உரிமையோடு, கனிவோடு வேண்டிக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News