செய்திகள்

கடைகளில் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்: தர்மபுரி கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2016-10-23 17:10 GMT   |   Update On 2016-10-23 17:10 GMT
வியாபாரிகள் அனைவரும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.
தர்மபுரி:

உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இந்தியா முழுவதும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே உணவிற்காக விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு சட்டம் வரையறுத்து உள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கும் அயோடின் உப்பு உதவுகிறது. பெரியோர்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்சினைக்கு மருந்தாக பயன்படும் அயோடின் உப்பு, உடல் சக்தி மற்றும் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது.

கழுத்து கழலை நோய் வராமல் தடுக்கிறது. குழந்தைகளின் கல்வித்திறன் மேன்மைக்கும், புத்திகூர்மைக்கும், மனவளர்ச்சிக்கும் உதவுகிறது. எனவே பொதுமக்கள் அயோடின் கலந்த உப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வியாபாரிகள் கடைகளில் முழுமையான முகவரி இல்லாத அல்லது போலி முகவரியிட்ட உப்பு பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே வியாபாரிகள் அனைவரும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.

Similar News