செய்திகள்

ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி தொடக்கம்

Published On 2016-10-22 16:17 GMT   |   Update On 2016-10-22 16:17 GMT
ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் ரூ.7 கோடி செலவில் செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு நீலகிரி மாவட்டம் பயிற்சி பெறுவதற்கு உகந்த மாவட்டமாக உள்ளது. குறிப்பாக தடகள போட்டிகளில் விளையாடுபவர்களுக்கு இங்கு சிறந்த பயிற்சி பெற முடியும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் விளையாட்டில் பங்குபெற்ற இந்திய தடகள அணிக்கு ஊட்டியில் தான் பயிற்சி அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே ஊட்டியில் மலை மேலிட பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதவிர ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி பெற நவீன ஓடுதளம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதன்படி ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நவீன செயற்கை ஓடுதளம் (சிந்தடிக் ஓடுதளம்) அமைக்க ரூ.7 கோடி நிதியை மத்திய–மாநில அரசுகள் ஒதுக்கின. இதைத்தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓடுதளம் அமைப்பதற்கான பூமிபூஜை நடத்தப்பட்டது.

தற்போது மைதானத்தில் உள்ள ஓடுதளத்தை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும், நடைபயிற்சி செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி இன்னும் 7 முதல் 9 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News