செய்திகள்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று வருகிறார்: பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

Published On 2016-10-22 02:24 GMT   |   Update On 2016-10-22 02:24 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று வருகிறார். நாமெல்லாம் மனநிம்மதியும், நம்பிக்கையும் பெறும் வகையில் அவர் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
சென்னை:

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், நடிகர் விஜயகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி உள்பட பலரும் நேற்று அங்கு வந்து ஜெயலலிதாவின் உடல்நலனை விசாரித்து சென்றனர்.

பின்னர், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலம் பெற்று வருகிறார். நாமெல்லாம் மனநிம்மதியும், நம்பிக்கையும் பெறும் வகையில் அவர் நலம் பெற்று வருவது மகிழ்ச்சியை தருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா நமக்கு தொண்டாற்ற வருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. அவர் எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் இருப்பார் என்பது குறித்து டாக்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறியதாவது:-

பல்லாயிரக்கணக்கான மக்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய பிரார்த்தனை செய்வது போல நானும் பிரார்த்திக்கிறேன். முதல்-அமைச்சருக்கு சிறந்த முறையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதால், அவர் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்புவார் என தெரிவித்து உள்ளனர்.

இது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணம் அடைந்து பணிகளை தொடர என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



நடிகர் விஜயகுமார் கூறியதாவது:-

ஜெயலலிதா மிகவும் துணிச்சலானவர். என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் சொல்வதைப்போல் கடவுள் நல்லவர்களை சோதிப்பார். ஆனால் கைவிட மாட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து போயஸ் தோட்டத்து இல்லத்துக்கு வந்து பல லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News