செய்திகள்

ஜெயலலிதா உடல்நிலை விவகாரம்: பெண் டாக்டர்- டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

Published On 2016-10-21 09:15 GMT   |   Update On 2016-10-21 09:15 GMT
ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும், சிகிச்சை விவரங்கள் கேட்டும் பெண் டாக்டர், டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் பிரவீணா என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்அமைச்சர் கடந்த மாதம் 22-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது டாக்டர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அவ்வப்போது அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

ஆனால், முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே, ஜெயலலிதாவுக்கு என்ன மாதிரி மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்பதை அரசு டாக்டர்கள் மூலம் ஆய்வு செய்யவேண்டும். இதற்காக அரசு டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு மனு கொடுத்தேன்.

மேலும், அந்த மனுவில், முதல்அமைச்சரின் உடல் நலம் மோசமாக இருந்தால், அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

ஆனால், என்னுடைய கோரிக்கை மனுவுக்கு இதுவரை எந்த பதிலையும் தலைமை செயலாளர் தெரிவிக்கவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உடல் நலத்தை ஆய்வு செய்ய அரசு டாக்டர்கள் குழுவை அமைக்கவும், தேவைப்பட்டால் வெளிநாட்டிற்கு அழைத்து சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரைப் பார்த்து நீதிபதிகள், ‘உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் உடல் நலம் குறித்து தங்களுக்கு என்ன கவலை? இந்த வழக்கு பொதுநலனுடன் தாக்கல் செய்யப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை தொடர்ந்துள்ள பிரவீணா, ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை ரத்து செய்ய கோரி ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும், உடல்நிலை குறித்து கருத்து தெரிவிப்போர் கைது செய்யப்படுவதை தடுக்க உத்தரவிடக்கோரியும் கூறியிருந்தார்.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதில் தமிழக அரசுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.

Similar News