செய்திகள்

ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி: டிராபிக் ராமசாமி மீது 2 வழக்குகள்

Published On 2016-10-21 06:16 GMT   |   Update On 2016-10-21 07:33 GMT
முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னையில் 7 பேரும், கோவையில் 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திலும் தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வருகிறது. 50-க்கும் மேற்பட்டோர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர்கூட தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் முதல்- அமைச்சரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக டிராபிக் ராமசாமி மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. கிஷோர் கே.சாமி மற்றும் விஜயராஜ் ஆகிய இருவர் புகார் அளித்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளிக்கப்பட்ட இந்த புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளனர்.

டிராபிக் ராமசாமி மீது தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பி சிக்கியவர்களின் வரிசையில் டிராபிக் ராமசாமியையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar News