செய்திகள்

தொழில் உரிமம் பெறாமல் நடத்திய 10 கடைகளை பூட்டி சீல் வைப்பு: எழும்பூரில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Published On 2016-10-19 08:57 GMT   |   Update On 2016-10-19 08:57 GMT
எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தொழில் செய்பவர்கள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு தொழில் உரிமம் பெற்று வியாபாரங்களை நடத்த வேண்டும் என்பது மாநகராட்சியின் விதி முறையாகும்.

ஆனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் தொழில்கள் செய்வதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அனுமதி பெறாமல் நடந்து வரும் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள வேனல்ஸ் ரோடு, காந்தி இர்வின் ரோடு பகுதிகளில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்தனர்.

ஓட்டல்கள், ஆம்னி பஸ் அலுவலகம், பீடா கடை, மெக்கானிக் கடை. இம்பிரீயல் ஓட்டல் வளாகத்தில் உள்ள கடைகள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன.

சீல் வைக்கப்பட்ட கடைகளின் கதவுகள் மீது அறிவிப்பு நோட்டீசுகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் தொழில் உரிமம் பெறாமல் தொழில்கள் நடத்தப்பட்டு வந்ததால் மாநகராட்சி விதிகளின்படி மூடி சீல் வைக்கப் பட்டுள்ளது” என்று குறிப் பிடப்பட்டுள்ளது.

எழும்பூர் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள கடைகள் சீல் வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News