செய்திகள்

தனியார் பஸ் மோதி 3 வாலிபர்கள் காயம்

Published On 2016-10-16 14:01 GMT   |   Update On 2016-10-16 14:01 GMT
தாசநாயக்கன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 3 வாலிபர்கள் காயம் அடைந்தனர்.

கொண்டலாம்பட்டி:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து இன்று காலை 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சேலத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

தாசநாயக்கன்பட்டி அருகே பஸ் வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஓரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்தனர். அவர்கள் தூக்கி வீசப்பட்டத்தில் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே பனமரத்துப் பட்டி பிரிவு ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. அதில் 3 பேரையும் ஏற்றி சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் மருத்துவமனை அவசர வார்டில் அனுமதிக்கப்பட்ட 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில் காயம் அடைந்த 3 பேரும் மணியனூர், பொடாரங்காடு பகுதியை சேர்ந்ம இஸ்மாயில் மகன் அஜித்(வயது 18), அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் இளையராஜா(19), அன்னதானப்பட்டி கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சுரேஷ்(18) என்பது தெரியவந்தது.

இவர்கள் அன்னதானப்பட்டியை அடுத்த ஒரு தனியார் மருத்துவமனையின் அருகில் உள்ள ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் வேலை செய்து வருகிறார்கள்.

மேலும் இவருக்கு சொந்தமான குடோன் பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் உள்ளது. இந்த குடோனில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரித்து விட்டு மீண்டும் சேலம் டவுனை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தபோது 3 பேரும் விபத்தில் சிக்கி உள்ளதும் தெரியவந்தது.

Similar News