செய்திகள்

பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரெயிலுக்கு இன்று 109-வது வயது: கேக் வெட்டி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

Published On 2016-10-15 03:49 GMT   |   Update On 2016-10-15 03:49 GMT
ஊட்டி மலை ரெயிலுக்கு இன்று 109-வது வயது ஆவதால் பிரமாண்ட கேக் வெட்டி சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஊட்டி:

ஊட்டி மலை ரெயில் கடந்த 1907-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. இன்று(15-ந் தேதி) மலை ரெயிலுக்கு 109-வது வயது பிறந்த நாள்.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை மொத்தம் 46 கிலோ மீட்டர் தூரம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து குன்னூர் வரை டீசல் என்ஜீன் மூலமும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி என்ஜீனிலும் இயக்கப்பட்டு வருகிறது. 16 சுரங்க பாதைகள், 250 பாலங்களை இந்த ரெயில் கடந்து செல்கிறது. வழிநெடுகிலும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள், நீர்வீழ்ச்சிகள், தேயிலை தோட்டங்கள், வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை சுற்றுலா பயணிகள் ரசித்து கொண்டு செல்வார்கள்.

குறிப்பாக கோடை விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்து வரும்.

இத்தகைய பாரம்பரியமிக்க ஊட்டி மலை ரெயிலுக்கு இன்று 109-வது வயது ஆவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

இதையொட்டி மலை ரெயிலுக்கு அலங்கார தோரணங்கள் செய்யப்பட்டு இருந்தன.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சங்கர் கலந்து கொண்டார். விழாவில் பிரமாண்ட கேக் வெட்டி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Similar News