செய்திகள்
மணல் குவாரியை முற்றுகையிட நல்லக்கண்ணு தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்ற போது எடுத்த படம்.

கரூர் அருகே மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம்: நல்லக்கண்ணு-இயக்குனர் கவுதமன் உள்பட 400 பேர் கைது

Published On 2016-10-12 06:53 GMT   |   Update On 2016-10-12 06:53 GMT
கரூர் அருகே இன்று மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற நல்லக்கண்ணு, இயக்குனர் கவுதமன் உள்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்:

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையம், கோம்பு பாளையம், தோட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அங்கு மணல் எடுக்க புதிதாக குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, விவசாயம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனவே அங்கு புதிய மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி பல்வேறு அமைப்பினர், விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நல்லக்கண்ணு ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காவிரி பாதுகாப்பு இயக்கத்தினர் புதிய மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, தளவாப்பாளையம் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து மணல் குவாரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் வஜ்ரா வாகனமும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இதனிடையே முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, திரைப்பட இயக்குனர் கவுதமன், தே.மு.தி.க. தொழிற்சங்கம் பொன் இளங்கோவன், கே.எஸ்.ஆர். மணி உள்பட ஏராளமான பொதுமக்கள் வெள்ளைக் கொடிகளை கையில் ஏந்தியபடி தளவாப்பாளையம் மணல் குவாரிக்கு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தளவாப்பாளையம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் நல்லக்கண்ணு, இயக்குனர் கவுதமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட 400 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News