செய்திகள்

மதுரை அருகே தம்பதியர் கடத்தல்: 3 பேர் கைது

Published On 2016-10-04 09:00 GMT   |   Update On 2016-10-04 09:01 GMT
கடத்தப்பட்ட தம்பதியரை மீட்ட போலீசார் அவர்களை கடத்தியதாக 3 பேரை கைது செய்தனர்.

மதுரை:

தூத்துக்குடியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது58). இவரது மனைவி மெர்சி மரகதம் (51). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் பகுதியில் நின்றபோது, ஒரு கும்பல் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ்காரர் செந்தில்ராஜா, ஊர்க்காவல்படையை சேர்ந்த குருபிரசாத் ஆகியோர் காளவாசல் முடக்குச்சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக வந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் அசாருதீன் என தெரியவந்தது. அவர் மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக தெரிவித்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்து அசாருதீன் குறிப்பிட்ட விடுதிக்கு சென்று போலீசார் பார்த்தனர். அப்போது அங்கு கடத்தப்பட்ட செல்வகுமார், அவரது மனைவி மெர்சி ஆகியோர் இருப்பதும், அவர்களுக்கு பாதுகாப்பாக 2 பேர் நின்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட தம்பதியரை மீட்டனர்.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, தம்பதியரை கடத்தியதாக அசாருதீன், விக்னேஷ், செய்யது அகமது ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரர் செந்தில்ராஜா, ஊர்க்காவல்படை வீரர் குருபிரசாத் ஆகியோரை போலீஸ் கமி‌ஷனர் சைலேஷ் குமார் யாதவ் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Similar News