செய்திகள்

சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் காய்கறி வேன்களை தடுத்து நிறுத்தும் கர்நாடக போலீசார்

Published On 2016-10-03 11:18 GMT   |   Update On 2016-10-03 11:18 GMT
சத்தியமங்கலத்தில் இருந்து செல்லும் காய்கறி வேன்களை தடுத்து நிறுத்தும் கர்நாடக போலீசாரால் தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.
சத்தியமங்கலம்:

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தமிழகம்-கர்நாடகம் இடையே இன்னும் இயல்பு நிலை சீராகவில்லை.

இரு மாநில பஸ்களும் எல்லை (புளிஞ்சூர்) வரை சென்று அந்தந்த மாநில பயணிகளை இறக்கி விட்டு ஏற்றி கொண்டு வருகிறது.

இதே போல் சரக்கு லாரிகளும் தொடர்ந்து செல்ல முடியாமல் தவித்து வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் கர்நாடகா மாநிலம் மைசூர், கொள்ளேகால், சாம்ராஜ் நகருக்கு காய்கறி வேன்கள் மற்றும் மல்லிகை பூக்கள் ஏற்றி கொண்டு செல்லும்.

ஆனால் கர்நாடகாவில் தொடர்ந்து பதட்டம் காரணமாக இந்த காய்கறி சரக்கு வாகனங்களும் செல்ல முடியாமல் தவித்து வருகிறது.

மாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று அங்கிருந்து கர்நாடகா பதிவெண் கொண்ட சரக்கு வேனில் காய்கறிகளை அனுப்பி வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள கர்நாடகா போலீசார் சத்தியமங்கலத்தில் இருந்து வரும் காய் கறி வேன்களுக்கு தடை விதிக்கிறார்கள். "காய் கறிகளை கொண்டு வராதீர்கள் திரும்பி போய் விடுங்கள்" என்று மிரட்டும் தொனியில் கூறி வருகிறார்கள். இதனால் என்ன செய்வது என தமிழக வியாபாரிகள் தவிக்கிறார்கள்.

இதையொட்டி தாளவாடி வரை வந்து செல்லும் கர்நாடகா மாநில தனியார் பஸ்களில் காய்கறிகளை வியாபாரிகள் அனுப்பி வருகிறார்கள்.

இதே போல் கர்நாடகா மாநில தனியார் பஸ்களிலும் தாளவாடிக்கு காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் கொண்டு வரப்படுகிறது.

தாளவாடியில் இரு மாநிலத்தவர்களும் சம அளவில் வசித்து வருவதால் இதற்கு யாரும் தடை விதிப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News