செய்திகள்

இயற்கை வளங்களில் உள்ள விளம்பரங்களை 2 மாதங்களுக்குள் அகற்றவேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-10-01 03:18 GMT   |   Update On 2016-10-01 03:18 GMT
தமிழகம் முழுவதும் இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை 2 மாதங்களுக்குள் முழுமையாக அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை 2 மாதங்களுக்குள் முழுமையாக அகற்றவேண்டும் என்று தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டிடங்கள், மலைகள், பாறைகள் போன்ற இயற்கை வளங்கள், பாலங்கள், சாலைகளின் மத்தியில் உள்ள தடுப்புகள், சாலைகளின் ஓரங்கள் உள்ள சுவர்கள், மரங்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக்கோரியும், அதற்கு தடைவிதிக்கக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இதேபோல பொது இடங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு தடை கேட்ட டிராபிக் ராமசாமியும் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் அரசியல், மதம், வர்த்தகம் உள்ள எந்த விளம்பரங்களும் செய்யக்கூடாது என்று தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், இந்த வழக்குகள் ஐகோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இயற்கை வளங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள விளம்பரங்களை 2 மாதத்திற்குள் முழுமையாக அகற்றவேண்டும். அதேபோல் அந்த விளம்பரங்களை அழிக்க ஆகும் செலவை சம்பந்தப்பட்டவர்களிடமே வசூலிக்கவேண்டும். 2 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள்தான் அதற்கு பொறுப்பாவார்கள். அவர்கள் தான் தகுந்த விளக்கத்தை இந்த ஐகோர்ட்டுக்கு அளிக்கவேண்டும்’ என உத்தரவிட்டார்கள். விசாரணையை வருகிற டிசம்பர் 9-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Similar News