செய்திகள்

பல்லாவரத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஜவுளிக்கடை கட்டிடத்தை ஒரு வாரத்தில் இடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2016-10-01 03:15 GMT   |   Update On 2016-10-01 03:15 GMT
பல்லாவரம் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ஜவுளிக்கடை கட்டிடத்தை ஒரு வாரத்தில் இடிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை பல்லாவரத்தில் ஜவுளிக்கடை வைத்திருப்பவர் எம்.ஏ.எம்.ஹயாத். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லாவரம், ரங்கநாத முதலி தெருவில் 3 மாடி கட்டிடத்தில் எங்கள் ஜவுளிக்கடை இயங்குகிறது. இந்த நிலையில், கடை உள்ள கட்டிடத்தின் தரை அடித்தளப்பகுதி, 2 மற்றும் 3-வது தளங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் எனவே, அவற்றை இடிக்க வேண்டும் என்றும் பரங்கிமலை கண்டோன்மென்ட் முதன்மை செயல் அதிகாரி எங்களுக்கு கடந்த ஆகஸ்டு 8-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, தென்னிந்திய ராணுவ முதன்மை இயக்குனரிடம் மேல்முறையீடு செய்தோம். அதற்கு ஆகஸ்டு 23-ந்தேதி, விதிமுறையை மீறி கட்டப்பட்ட பகுதியை இடிக்க வேண்டும் என்று முதன்மை செயல் அதிகாரி கூறினார். நாங்கள் கட்டிடத்துக்கு முறையான சொத்து வரி செலுத்தி வருகிறோம். எனவே, எங்கள் கட்டிடத்தில் விதிமீறல் பகுதியை இடிக்கவேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

வணிக நோக்கில் இயங்கி வரும் அந்த ஜவுளி நிறுவனம் விதிமுறைகளை மீறி தரை அடித்தளப்பகுதி 2-வது மற்றும் 3-வது மாடிகளை கட்டியிருப்பது ஆவணங்களை பரிசீலிக்கும் போது அப்பட்டமாக தெரிகிறது.

அனுமதி பெறப்பட்ட அளவை விட கூடுதலாக கட்டியுள்ள கட்டிடங்களை இடிக்கத்தான் நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புக்களையோ அல்லது விதிமுறை மீறல்களையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஏற்கனவே சென்னை மாநகரில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களை இடிக்க ஐகோட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

கட்டிட விதிமீறலை அனுமதிக்க முடியாது. எனவே விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள தளங்களை ராணுவ கட்டுப்பாட்டு சட்டபடி ஒரு வாரத்திற்குள் இடிக்க வேண்டும். அதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும். ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படவுள்ள கட்டிட பகுதியில் வைத்திருக்கும் பொருட்களை மனுதாரர் அகற்ற வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் தவறான தகவல்களை இந்த ஐகோர்ட்டுக்கு தெரிவித்துள்ளதால், அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த தொகையை ஒரு வாரத்துக்குள் பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு வழங்கவேண்டும். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Similar News