செய்திகள்
சசிகுமார் மனைவி யமுனா

கோவையில் கொலை செய்யப்பட்ட சசிகுமார் மனைவி தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2016-09-29 04:28 GMT   |   Update On 2016-09-29 04:28 GMT
கோவையில் கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி யமுனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.

சசிகுமார் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த யமுனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தவர். சசிகுமாரின் மறைவு அவரது மனைவி யமுனாவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரை உறவினர்கள் தேற்றினர். என்றாலும் அவர் எப்போதும் கணவர் நினைவாக கண்ணீர் சிந்தியபடி காணப்பட்டார்.

7-வது நாளான நேற்று சசிகுமார் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலேயே அவரது மனைவி யமுனா, தந்தை சின்னசாமி, சகோதரர்கள் சுதாகர், தனசேகர், தனபால் மற்றும் உறவினர்கள் போலீஸ் பாதுகாப்புடன் தனி வேனில் சென்று துடியலூர் மின் மயானத்தில் சசிகுமாரின் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். பின்னர் சாடி வயலில் அஸ்தியை கரைத்து விட்டு பேரூர் கோவில் அருகிலுள்ள மண்டபத்தில் ஹோமம், குண்டத்துடன் திதி பூஜை நடைபெற்றது.

இந்தநிலையில் இன்று காலை 6 மணி அளவில் கழிவறைக்கு சென்ற யமுனா வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது யமுனா சாணிப்பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் இந்து முன்னணியினர் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Similar News