செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: மலை சாதியினருக்கு இடஒதுக்கீடு கேட்டு தி.மு.க. வழக்கு

Published On 2016-09-27 07:24 GMT   |   Update On 2016-09-27 07:24 GMT
உள்ளாட்சி தேர்தலில் மலை சாதியினருக்கு இடஒதுக்கீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு கடந்த 16-ந்தேதி 2 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல, கடந்த 19-ந்தேதி சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கும் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகளில், மலைசாதியினருக்கு (எஸ்.டி. பிரிவினருக்கு) தகுந்த இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பிற பிரிவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு போல், எஸ்.டி. பிரிவினருக்கு உரிய இடங்களை ஒதுக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள், அரசியலமைப்பு சட்டத்துக்கும், தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்கும் எதிராக உள்ளன.

எனவே, இந்த 3 அரசாணைகளையும் ரத்து செய்ய வேண்டும். எஸ்.டி. பிரிவினருக்கு தகுந்த இடஒதுக்கீடு வழங்கி புதிய அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி கே.கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பி.வி.செல்வகுமார், இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்து குமாரசாமி ஆஜராக உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.

Similar News