செய்திகள்

பூரண குணம் அடைந்தார்: ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புகிறார்

Published On 2016-09-27 07:00 GMT   |   Update On 2016-09-27 07:00 GMT
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குணம் அடைந்துள்ள நிலையில், அவர் வீடு திரும்பும்தேதி இன்று முடிவு செய்யப்படும் என்றும் நாளை அதிகாலை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந் தேதி இரவு உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் குணம் அடைந்தது.

என்றாலும் 12 விதமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா வீட்டில் இருந்து வரும் வழக்கமான உணவை சாப்பிடுகிறார். நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்தவாரே அரசு அலுவலக முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டார். காவிரி பிரச்சனை உள்பட தமிழகத்தின் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் கேட்டபோது முதல்- அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார். வீட்டில் இருந்து வரும் வழக்கமான உணவை சாப்பிடுகிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார், முதல் -அமைச்சரின் உடல் நிலை குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தனர்.

ஜெயலலிதா வேகமாக குணம் அடைந்து வருவதால் அவர் வீடு திரும்பும்தேதி இன்று முடிவு செய்யப்படும் என்றும் நாளை அதிகாலை அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா தங்கியுள்ள ஆஸ்பத்திரி முன் இன்று 6-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டிருந்தனர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஆவலோடு கேட்டறிந்தனர். தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News