செய்திகள்

கோவையில் பஸ்கள் மீது கல்வீச்சு-பொதுசொத்துக்கள் சேதம்: வன்முறையில் ஈடுபட்ட 108 பேர் கைது

Published On 2016-09-24 04:56 GMT   |   Update On 2016-09-24 04:56 GMT
கோவையில் வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 108 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார்(வயது 36) நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் நேற்று முழு அடைப்பு நடந்தது. சசிகுமார் உடல் பிரேத பரிசோனை நடந்த கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திடீரென கடைகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அரசு பஸ்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் சேதப்படுத்தப்பட்டன.

வன்முறையின் உச்சகட்டமாக துடியலூரில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டது. 3 கடைகள் கொளுத்தப்பட்டன. கல்வீச்சு தாக்குலில் 4 போலீஸ் ஏட்டுகள் காயம் அடைந்தனர். கோவை மாநகர் மற்றும் துடியலூரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று இரவு உக்கடம் ஆத்துப்பாலம் அருகே ஒரு தரப்பினர் திரண்டனர். வழிபாட்டு தலங்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறிய அவர்கள் திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினார்கள்.

சம்பவஇடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டு, பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக உக்கடம், காந்திபுரம், ரேஸ் கோர்ஸ், சாய்பாபாகாலனி, ஆர்.எஸ்.புரம், ரத்தினபுரி, போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

புறநகர் பகுதிகளான துடியலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் பகுதிகளில் பொதுசொத்துக்களை சேதப்படுத்தியதாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாநகர பகுதிகளில் 30 பேரும், புறநகர பகுதிகளில் 240 பேரும் கைது செய்யப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நேற்று கடைகளின் மீது கல்வீசி தாக்கிய சம்பவத்தில் போலீசாருக்கு ஏராளமான வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை அடிப்படையாக வைத்து பொது சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News