செய்திகள்

முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணியை தொடர வேண்டும்: கருணாநிதி வாழ்த்து

Published On 2016-09-23 11:57 GMT   |   Update On 2016-09-23 11:57 GMT
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து பணியை தொடர தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சல் குணமடைந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடுதிரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் விரைவில் குணமடைய வேண்டி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவிக்கின்றனர்.

அவ்வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஜெயலலிதா விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 “முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெற வேண்டும். கொள்கை அளவில் வேறுபட்டாலும் அவர் விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்” என கருணாநிதி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூறியுள்ளார்

‘தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்’ என சித்தராமையா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Similar News