செய்திகள்

பெரியகுளம் அருகே கிராம மக்கள் வாங்கி சென்ற ரேசன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள்

Published On 2016-09-23 10:51 GMT   |   Update On 2016-09-23 10:51 GMT
பெரியகுளம் அருகே கிராம மக்கள் வாங்கி சென்ற ரேசன் அரிசியை கடத்துவதாக நினைத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரிகுளம்:

தேனி மாவட்டத்தில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு அடிக்கடி கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும் கடத்தல்காரர்கள் அவர்கள் கண்ணில் படாமல் ரேசன் அரிசியை கடத்தி செல்கின்றனர். இந்நிலையில் பெரிகுளம் அருகே சோத்துப்பாறை பகுதியில் குதிரைகள் மூலம் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அகமலை நோக்கி குதிரைகளில் கொண்டு வரப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். குதிரைகளின் உரிமையாளர்கள் முருகன், மாரியப்பன் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ரேசன் அரிசியை கடத்தி செல்லவில்லை. அகமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பெரியகுளத்தில் உள்ள ரேசன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. அங்கு அவர்கள் வாங்கிய அரிசியைதான் குதிரைகளில் அவர்களின் வீட்டுக்கு கொண்டு சென்றோம் என்று கூறினர்.

இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த 3,200 ரூபாயை பறிமுதல் செய்து கொண்டு அனுப்பிவிட்டனர். இதுபற்றி அறிந்த அகமலை மற்றும் சுற்றுவட்டா கிராம மக்கள் சோத்துப்பாறையில் சாலை மறியல் செய்தனர். அதிகாரிகள் கடத்தல்காரர்களை பிடிக்காமல் தப்பவிட்டு விடுவார்கள். அப்பாவிகளான நாங்கள் வாங்கி சென்ற ரேசன் அரிசியை கடத்தி செல்வதாக பறிமுதல் செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சம்பவ இடத்துக்கு பெரியகுளம் டி.எஸ்.பி., வட்டாட்சியர் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை கிராம மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து கோட்டாட்சியர் ஆனந்தி அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்பு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளா என்று தெரிவித்தார். அதன்பின்னரே அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இச்சம் பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News