செய்திகள்

அசாம் மாநிலத்தில் காண்டாமிருகங்கள் வேட்டை: குன்னூரில் பதுங்கிய 2 பேர் கைது

Published On 2016-09-20 12:25 GMT   |   Update On 2016-09-20 12:25 GMT
அசாம் மாநிலத்தில் காண்டாமிருகங்களை வேட்டையாடி விட்டு, குன்னூரில் பதுங்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரு வாலிபர் தப்பி ஓட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர்:

அசாம் மாநிலத்தில் உள்ள தேசிய வன சரணாலயங்களில் காண்டாமிருகங்கள் அதிகமாக காணப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருந்து மருந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு காண்டாமிருகம் வேட்டை அதிகமாக நடைபெற்று வந்துள்ளது. தொடர்ந்து அதன் கொம்புகள் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் அசாம் மாநிலம் சிஸ்மந்த் மாவட்டத்தை சேர்ந்த முகபூப் அலி (வயது 24), மூர்காபின் (33) ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருந்தது. இவர்கள் காண்டாமிருகங்களை வேட்டையாடியது தொடர்பாக அசாம் மாநில வனத்துறையினர் தேடி வந்தனர். மேலும் இவர்களுக்கு சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பேரும் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கு வந்து தலைமறைவாக இருந்தனர். இது குறித்து அசாம் மாநில வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அசாம் மாநில வனத்துறை உயர் அதிகாரி ரமாண்டுதாஸ் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் குன்னூர் வந்தனர்.

அவர்கள் குன்னூரில் முகபூப் அலி, மூர்காபின் ஆகியோரை தேடினார்கள். இந்த நிலையில் நேற்று அவர்கள் குன்னூர் நகர போலீசார் உதவியுடன் சிம்ஸ் பூங்கா அருகில் பதுங்கி இருந்த 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

இதனிடையே முகபூப் அலி வனத்துறையினர், உள்ளூர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிம்ஸ் பூங்கா ரோட்டில் ஓடிய அவரை பொதுமக்கள் உதவியுடன் குன்னூர் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து குன்னூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் முகபூப் அலி, மூர்காபின் ஆகியோரை அசாம் மாநிலம் அழைத்து செல்ல மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர்களை அசாம் மாநில வனத்துறையினர் அழைத்துச்சென்றனர்.

Similar News