செய்திகள்

வாலாஜாவில் வாலிபர் கொலை வழக்கில் நண்பர் கைது

Published On 2016-09-19 06:04 GMT   |   Update On 2016-09-19 06:04 GMT
வாலாஜாவில் வாலிபர் கொலை வழக்கில் அவரது நண்பரான ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரின் வீட்டுக்கு தீவைப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது
வாலாஜா:

வாலாஜா தேவதானம் ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). லாரி டிரைவர். அதே பகுதியில் வசிப்பவர் மராட்டிய மாநில வம்சாவழி கோபிராவ். இவரது மனைவி ராணி. மகன் கங்கோஜி ராவ் (26). ஆட்டோ டிரைவர்.

விக்னேஷ், கங்கோஜி ராவ் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு தள்ளாடியபடி வீட்டிற்கு வந்தனர். இதனால் கங்கோஜி ராவ் தாய் ராணி ஆத்திரமடைந்தார். மகன் கங்கோஜி ராவுடன் சேரக் கூடாது என விக்னேசை கண்டித்தார்.

அப்போது போதையில் இருந்த விக்னேஷ் ஆத்திரத்தில் ராணியின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்தார். தாயை அடித்ததால் ஆத்திரத்தில் இருந்த கங்கோஜிராவ் விக்னேசுக்கு நேற்று மது ஊற்றிக் கொடுத்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இதையடுத்து, விக்னேசின் உடலை கங்கோஜி ராவ் ஆட்டோவில் போட்டுக் கொண்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் கொண்டு சென்று வீசி விட்டு தப்பினார்.

இதையறிந்த வாலாஜா போலீசார், விக்னேசின் உடலை மீட்டனர். ராணிப்பேட்டை சந்தையில் பதுங்கி இருந்த கங்கோஜி ராவை கைது செய்தனர். இந்த நிலையில், குற்றவாளி கங்கோஜி ராவின் குடிசை வீட்டை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.

தீ மளமளவென பரவியதால் குடிசை வீடு எரிந்து சாம்பலானது. கங்கோஜி ராவின் பெற்றோர் விசாரணைக்காக வாலாஜா போலீஸ் நிலையம் சென்று இருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.

கொலையுண்ட விக்னேஷ் தரப்பை சேர்ந்தவர்கள் யாராவது? கங்கோஜி ராவின் வீட்டிற்கு தீ வைத்து இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ஜே.ஜே.நகர் பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

Similar News