செய்திகள்

குணா குகையில் சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி

Published On 2016-09-09 11:39 GMT   |   Update On 2016-09-09 11:39 GMT
கொடைக்கானலில் குணா குகையை சுற்றுலா பயணிகள் பார்க்க வனத்துறை அனுமதி வழங்க உள்ளது.
கொடைக்கானல்:

கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்தாலும் குணா குகைக்கு தனி மவுசு உண்டு. டெவில்ஸ் கிட்சன் என்று அழைக்கப்படும் ஆபத்தான இந்த பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இந்த குகையில் குணா திரைப்படம் எடுக்கப்பட்டதால் மிகவும் பிரபலமானது. அதன்பிறகு கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் குணா குகையை பார்வையிட ஆர்வம் காட்டினர். இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

எனவே குணா குகையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 10 ஆண்டுக்கு பின்னர் குணா குகையை சுற்றுலா பயணிகளுக்கு பார்க்க வனத்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி முருகன் கூறுகையில் குணா குகையை சுற்றுலா பயணிகள் பார்வையிட வனத்துறை முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளது. விபத்துகளை தவிர்த்து தூரத்தில் இருந்தபடி குகையை பார்க்க சுற்றுலா துறை மூலம் அனுமதி விரைவில் வழங்கப்படும்.

வரும் சீசன் காலத்தில் இதற்கு அனுமதி வழங்க தற்போது பணிகள் நடந்து வருகிறது என்றார்.

Similar News