செய்திகள்

ஓய்வுபெற்ற 240 மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.13.88 கோடி ஓய்வூதிய பயன்: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்

Published On 2016-09-07 02:37 GMT   |   Update On 2016-09-07 02:37 GMT
மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பயன்களையும், பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.
சென்னை:

சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பொதுத்துறை சார்பில், மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பயன்களையும், பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

கடந்த ஜூன் மாதம் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 240 பணியாளர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஓய்வூதிய பயன்கள் ரூ.13.88 கோடி வழங்கப்பட்டது. இதனால் மாதந்தோறும் ரூ.28.80 லட்சம் கூடுதல் செலவினம் ஏற்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியதாரர்கள் 9,003 பேரும், குடும்ப ஓய்வூதியதாரர்கள் 8,549 பேரும் உள்ளனர். இதில் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.10.98 கோடியும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.6.22 கோடியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் மாதந்தோறும் ரூ.17.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநகராட்சியில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுதாரர்கள் 57 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.

மேற்கண்ட தகவல்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Similar News