செய்திகள்

ரெயிலில் திருட்டு போன தொகை ரூ.5.75 கோடி: விருத்தாசலத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என சந்தேகம்

Published On 2016-08-09 12:53 GMT   |   Update On 2016-08-10 02:04 GMT
சேலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ரிசர்வ் வங்கியின் பணம் எந்த இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்தும், கொள்ளை போன பணத்தின் மதிப்பும் தெரியவந்துள்ளது.
சென்னை:

சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுக் கட்டுக்களை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தன. 228 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்ட இந்த பணத்துடன் வந்த ரெயில் பெட்டிகள் சென்னை வந்து சேர்ந்ததும் பணம் இருந்த பெட்டிகள் திறக்கப்பட்டன.

அப்போது, அதில் இருந்த சில பெட்டிகள் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ரெயில் பெட்டியின் மேற்கூரையை வெல்டிங் மூலம் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூரில் நிறுத்தப்பட்டுள்ள அந்த ரெயில் பெட்டியை ரெயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியன் பார்வையிட்டு பின்னர் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரெயில் பெட்டியில் பதிவான ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இதுபற்றி நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், விருத்தாசலத்தில் கொள்ளை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. என்ஜின் மாற்றுவதற்காக விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் ரெயில் நிறுத்தப்பட்டது. இரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என கூறப்படுகிறது.

சேலத்தில் இருந்து மொத்தம் 228 பெட்டிகளில் ரூ.342 கோடி பணம் அனுப்பப்பட்டதாக ரெயில்வே ஐ.ஜி. தெரிவித்தார். அனைத்து பெட்டிகளும் ஆய்வு செய்யப்பட்டதில், 16 பெட்டிகளை உடைக்கப்பட்டிருந்தது. அதில், இருந்த ரூ.5.75 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News