செய்திகள்

கோவையில் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், ஷைனா மீது மேலும் ஒரு வழக்கு

Published On 2016-05-26 10:07 GMT   |   Update On 2016-05-26 10:07 GMT
கோவையில் கைதான மாவோயிஸ்டு தலைவர் ரூபேஷ், ஷைனா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் தலைவர் ரூபேஷ், இவரது மனைவி ஷைனா உள்பட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர்கள் கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமானோரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் இருந்து ரேஷன்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அதன்மூலம் சிம்கார்டுகளை பெற்று பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கோவை கருப்புகவுண்டர் தெருவை சேர்ந்த காளிராஜ் என்பவரது மனைவி சாந்தி(40) வெரைட்டி ஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ரூபேஷ், ஷைனா ஆகியோர் எனது ஆவணங்களை பயன்படுத்தி சிம் கார்டு பெற்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

புகாரின்பேரில் ரூபேஷ், ஷைனா மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News