செய்திகள்
வாக்குசாவடியில் வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் காலை முதலே வாக்குசாவடிகளில் திரண்டு ஓட்டுபோட்ட வாக்காளர்கள்

Published On 2021-04-06 09:32 GMT   |   Update On 2021-04-06 09:32 GMT
வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு நின்றனர். ஒவ்வொருவரின் உடல் வெப்ப நிலை பரிசோதனையும் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் கைகழுவ பாதுகாப்பு திரவமும் வழங்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை முதலே வாக்காளர்கள் வாக்குசாவடி மையங்களுக்கு திரண்டு வரிசையில் காத்து நின்று ஓட்டு போட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளிலும் 1,924 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையிலேயே அதிக கூட்டம் காணப்பட்டது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். பெண்களுக்கான தனி வாக்குச்சாவடிகளிலும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

கிராமப்பகுதிகளில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கும் போது சில வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது குடும்பம், குடும்பமாக வந்து வாக்களித்தனர்.

இந்த முறை கொரோனா தொற்று நோய் தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், ஓட்டுப்பதிவின் போது அதற்கான விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன.

அனைத்து வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு நின்றனர். ஒவ்வொருவரின் உடல் வெப்ப நிலை பரிசோதனையும் பரிசோதிக்கப்பட்டு, அவர்கள் கைகழுவ பாதுகாப்பு திரவமும் வழங்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் கைவைத்து ஓட்டுப்போடுவதற்காக ஒவ்வொருவருக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கையுறை வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி அவர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளில் 2,097 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விளாத்திகுளம், திருச்செந்தூர் தொகுதிகளில் தலா 15 பேர் களத்தில் உள்ளனர். எனவே அந்த தொகுதிகளில் 1 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு கன்ட்ரோல் யூனிட், விவி பாட் எந்திரம் வைக்கப்பட்டிருந்தது.

கோவில்பட்டி, தூத்துக்குடி தொகுதிகளில் தலா 26 வேட்பாளர்களும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 21 வேட்பாளர்களும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 வேட்பாளர்களும் போட்டியிடுவதால் அந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குசாவடிகளில் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் 6 தொகுதிகளிலும் மொத்தம் 3,833 வாக்குப்பதிவு எந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண்டறியும் மிஷின் 2729 பயன்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் லேசான மேகமூட்டத்துடன் குளிர்ந்த கால நிலை நிலவியது. இதனால் ஏராளமானோர் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். அவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின் பற்றியும் வாக்களித்து சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 2,130 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் 1,884 வாக்கு சாவடி மையங்களில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்ட 143 இடங்களில் 143 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, துணை ராணுவ படையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகளுக்கு காலை முதலே வாக்களிக்க வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்தபடி சென்றனர். அனைத்து வாக்குச்சாவடி களிலும் கூடுதலாக 2 தன்னார்வலர்கள் நியமிக் கப்பட்டு வாக்காளர்களுக்கு கையுறை வழங்கினர்.

மேலும் அவர்களுக்கு சானிடைசரும் வழங்கப்பட்டது. வாக்காளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் சமூக இடை வெளியே கடைப்பிடித்து வாக்கினை பதிவு செய்தனர். இதனால் மாவட்டத்தில் காலை முதலே விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

Tags:    

Similar News