செய்திகள்
மதுரையில் கமல்ஹாசன், ராதிகா ஆகியோர் பிரசாரம் செய்தனர்

புதிய வாக்காளர்கள் தமிழக அரசியலை புரட்டிப்போடுவார்கள் - மதுரையில் கமல்ஹாசன் பிரசாரம்

Published On 2021-03-31 09:05 GMT   |   Update On 2021-03-31 09:05 GMT
தி.மு.க.- அ.தி.மு.க. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 ஆயிரம் கொடுத்து குத்தகைக்கு மக்களை எடுத்துக்கொள்வது போல் எடுத்துக்கொள்கிறார்கள் என மதுரையில் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

அவனியாபுரம்:

மதுரையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கமல் ஹாசன் பிரசாரம் மேற் கொண்டார்.

மதுரை பெத்தானியாபுரம், ஆரப்பாளையம், புதூர், அய்யர் பங்களா, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் கமல்ஹாசன் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அவருடன் சமத்துவ மக்கள் கட்சியின் முதன்னை துணை பொதுச்செயலாளரும், நடிகையுமான ராதிகாவும் பிரசாரம் கொண்டார்.

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் அரசியலை புரட்டிப் போடுவார்கள் அதனை மக்கள் நீதி மய்யம் மூலமாக அமைதியாக செயல்படுத்தி காட்டுவோம்.

மதுரையில் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் கொண்டு வருவோம். அனைத்து ஊர்களிலும் விளையாட்டு மைதானம் அமைத்திடுவோம். மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க செய்யவேண்டியது வேட்பாளர்களின் கடமை அதனை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதனை நான் வழிகாட்டுவேன்.

மக்கள் பணத்துக்காக வாக்களிக்கக் கூடாது. தி.மு.க.- அ.தி.மு.க. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 ஆயிரம் கொடுத்து குத்தகைக்கு மக்களை எடுத்துக் கொள்வது போல் எடுத்துக்கொள்கிறார்கள் எனவே புதிய வாக்காளர்கள் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார்கள் அரசியலை புரட்டிப் போடுவார்கள். 2 திராவிட கட்சிகளும் ஊழலில் திளைத்தவர்கள். தி.மு.க., அ.தி.மு.க. ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனை மறைக்க தற்போது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறவித்துள்ளார்கள்.


சட்டசபையில் 2 கட்சிகளை சேர்ந்த 33 சதவீதம் பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இனிமேலாவது நேர்மையானவர்கள் செல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் ராதிகா பேசுகையில், நாங்கள் 2 பேரும் திரைத்துறையில் உழைத்து முன்னேறி உள்ளோம். எங்களுக்கு ஆதரவு அளித்து உயர்த்திய மக்களையும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சேவை செய்ய வந்துள்ளோம்.

கொரோனா ஊரடங்கின் போது கியாஸ் சிலிண்டர்கள், கொடுக்காதவர்கள் தற்போது ஓட்டுக்காக இலவசமாக வழங்குவேன் என்று கூறியுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முக கவசங்களை சரியாக வழங்காதவர்கள் தேர்தலுக்காக இலவசங்களை வாரி வழங்குவதாக கூறுகின்றனர்.

திராவிட கட்சிகளில் ஒரு கட்சி குடும்ப சண்டையிலும், மற்றொரு கட்சி தலைமையின்றியும் காணாமல் போகும் என்றார். 

Tags:    

Similar News