செய்திகள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு

தமிழகத்தில் 1.55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்

Published On 2021-03-29 08:51 GMT   |   Update On 2021-03-29 08:51 GMT
தமிழகம் முழுவதும் இதுவரையில் ரூ.319 கோடி ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபாட் பயன்படுத்தப்படும். 1 லட்சத்து 20 ஆயிரத்து 807 விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.1 லட்சத்து 16 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.

வாக்குப்பதிவு எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதனை உடனே சரி செய்யவும், வாக்குப்பதிவு தடைபடாமல் நடைபெறவும், அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்கள் தபால் ஓட்டு பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள்.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுக்கு தபால் ஓட்டு வசதி அளிக்கப்படுகிறது. தேர்தல் பயிற்சியின்போது அவர்களுக்கு 12 படிவம் கொடுக்கப்படும். அதனை அவர்கள் தவறில்லாமல் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் இதுவரையில் ரூ.319 கோடி ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரையில் 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News