சிறப்புக் கட்டுரைகள்
கவிஞர் இரவிபாரதி

போதை, மது மற்றும் புகையின் தீமை பற்றி கண்ணதாசன் கவிதை- 25

Published On 2022-05-21 09:48 GMT   |   Update On 2022-05-21 09:48 GMT
கவலைகளை மறக்கவும், நன்றாகத் தூங்கவும் மட்டுமே மதுவை மருந்தாகப் பயன்படுத்துகிறேன் என்று அவரே இதனைப் பலமுறை பதிவு செய்திருக்கிறார்.


மதுவின் தீவிர ரசிகர் கண்ணதாசன் என்பது ஊரறிந்த செய்தியாகும். எப்படியோ அந்த மது அவரைத் தொற்றிக் கொண்டுவிட்டது.. விட்டு விலகவும் முடியாமல் ஒட்டிக் கொண்டு விட்டது. ஒளித்தும் மறைத்தும் பேசி கவிஞருக்கு பழக்கமில்லை... எழுதியுமிருக்கிறார். பேசியுமிருக்கிறார்.

ஆனால் சிலர் நினைப்பது போல் மதுக்குடித்து விட்டுத்தான் பாட்டெழுதுகிறார். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுகிறார் என்பது முற்றிலும் தவறான செய்தியாகும். மதுக்குடித்து விட்டு அவர் எதையும் எழுதியதில்லை என்பதே உண்மையான தகவலாகும். கவிஞரோடு நெருங்கிப் பழகியவர்க்கு மட்டுமே இந்த உண்மை தெரியும். மற்றவர்கள் அவ்வளவாக இதனை அறிய மாட்டார்கள்.

கவலைகளை மறக்கவும், நன்றாகத் தூங்கவும் மட்டுமே மதுவை மருந்தாகப் பயன்படுத்துகிறேன் என்று அவரே இதனைப் பலமுறை பதிவு செய்திருக்கிறார். ஒரு முறை ஒரு நிருபர் கவிஞரைப் பார்த்து

‘கோப்பையிலே என் குடியிருப்பு-ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்று எழுதியிருக்கிறீர்களே என்று கேட்ட போது கோப்பை என்பது மதுக்கோப்பை அல்ல... அது எழுதுவதற்கான ‘மை’ ஊற்றப்பட்டு வைக்கப்பட்ட மைக்கோப்பை அதிலே வைக்கப்பட்டிருந்த மயில் பலிதான் எனது எழுதுகோல் என்று சாமர்த்தியமாகப் பதில் சொன்னபோது எல்லோரும் வியந்து போனார்கள்.

அதுமட்டுமல்ல. படித்தேன். படித்த பின்பே குடித்தேன் என்று இன்னொரு நிருபர் எழுப்பிய கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கிறார்.

மதுவின் தீமையைப் பற்றி கண்ணதாசன் அறியாதவரல்ல. மதுவைக் குடித்துவிட்டு ஆட்டம்போட்டு ஆர்ப்பாட்டம் செய்து, குடும்பத்தையே கூறுபோட்டு, சிதைத்தவர்களை, கவிதையிலே கடுமையாகச் சாடியிருக்கிறார் கண்ணதாசன். ‘மது’ என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவிதையில் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

அப்படியா? மதுவின் தீமை பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் கண்ணதாசன் எழுதியிருக்கிறாரா? என்று கேட்டு, விழிகளை உயர்த்தி பலர் வினாத் தொடுப்பதை என்னாலே நன்றாகவே உணர முடிகிறது. அவர்களுக்காகவே கண்ணதாசன் ‘மது’ என்னும் தலைப்பில் எழுதிய அந்த கவிதையை வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

‘மது மயக்கம் அது மதிமயக்கம்-ஒரு

வம்சத்தை அழிப்பது மதுப்பழக்கம்’

என்று தொடங்குகிறது அந்தக் கவிதை. ஒரு வம்சத்தை அழித்துவிடுகிறது கொடுமை நிறைந்தது இந்த மது என்பதை தொடக்கத்திலேயே அறிவுறுத்துகிறார்.

புத்தியுள்ளோர்க்கு புகழ் மயக்கம்-தொழில்

புரிபவர் காண்பது பொருள் மயக்கம்

பக்தியுள்ளோர்க்கு அருள் மயக்கம்-நன்கு

படித்தவர் காண்பது மொழி மயக்கம்

உத்தமன் என்றுனை ஊர் புகழ்ந்தால்-அந்த ஒவ்வொரு சொல்லிலும் போதை உண்டு.

சக்தியுள்ளோன் என்று புகழ்ந்துரைத்தால்-அந்த தனித்தன்மையில் ஒரு மயக்க முண்டு.

என்று ‘போதை’ என்பது மதுவால் மட்டுமல்ல. வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எப்படி படர்ந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் கவிஞர்.

கட்டிய மனைவிக்கு சுகமிருக்கும் உன்

காதலில் இலக்கிய மணமிருக்கும்

தொட்டிலில் கிடைக்கின்ற குழந்தை உயர்

சுடர்மிக்க காலங்கள் காத்திருக்கும்...

தேவை இல்லாததைப் பழகிவிட்டு பின்பு

தினம் தினம் ஆயிரம் கவலைப்பட்டு

ஆயிரம் டாக்டரைப் பார்த்து விட்டு - நீ

அலறுவதேனோ? அவதிப்பட்டு...

மதுவைத் தொடாவிடில் சபை மதிக்கும் - அந்த

மதிப்பினில் புதுப்புது தொழில் கிடைக்கும்

அதிகம் உழைத்திட உடல் இருக்கும் - உனை

அனைவரும் வணங்கிடும் நிலை பிறக்கும்... என்று மதுவை நீ தொடாவிட்டால் உன் வாழ்க்கை எப்படி எல்லாம் பிரகாசிக்கும் என்பதை எத்தனை அழகுபட எடுத்துரைத்திருக்கிறார் கண்ணதாசன். இந்தப் பழக்கம் எப்படி என்னை ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது என்பதையும், அதனால் தான் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டேன் என்பதையும் அடுத்து வரும் வரிகளில் விவரிக்கிறார்...

ஒருநாள் மாலையில் பழகிக் கொண்டேன். பின்

ஒவ்வொரு நாளிலும் தொடர்ந்து சென்றேன்.

விட நினைத்தேன் அதை முடியவில்லை - குலம்

வேதனைப் படுவது சகிக்கவில்லை...

குடிக்கின்ற நேரம் வந்து விட்டால் - என்

குடும்பத்தின் மீதே எரிச்சல் வரும்...

இருக்கின்ற தாலியை பறித்துக் கொள்ளும்-மது

ஏக்கத்தில் எதையும் குடித்து விடும்...

நல்லது கிடைத்திட வில்லையெனில் - மனம்

நாட்டுச் சரக்கினைத் தேடச் சொல்லும்

இல்லையெனில் அது விஷம் குடிக்கும் - புத்தி

இருப்பதும் அன்று மறந்து விடும்...

அடுத்து வரும் வரிகளில் இன்னும் என்னென்ன சொல்லுகிறார் என்பதைப் பார்ப்போம்.

குடித்த பின் சொல்லும் வார்த்தைகளில் வரும்

கோபங்களை மனஸ்தாபங்களை

விடிந்த பின் யாரும் எடுத்துரைத்தால்-அது

விவஸ்தை இல்லாமல் மறந்திருக்கும்...

என்ன செய்தோம் என்று புரிவதில்லை-நாம்

இருக்கும் இடங்களும் தெரிவதில்லை...

நல்ல குடும்பத்தில் பிறந்த பிள்ளை - எனும்

நலமிக்க தகுதியும் பார்ப்பதில்லை...

ரகசியம் அனைத்தையும் உளற வைக்கும் - தினம்

ராத்திரி முழுவதும் விழிக்க வைக்கும்...

அவசரமான வேலையையும்... அட

ஆகட்டும் போவென விலக்கி வைக்கும்...

சுயமரியா தையை இழக்காதே- உயர்

சுத்தசன் மார்க்கத்தை மறக்காதே...

பெயரினைப் பழக்கத்தில் கெடுக்காதே -உன்

பெருமையைக் காத்திடக் குடிக்காதே...

என்று மதுவின் தீமைக்கவிதையை முடிக்கிறார் கண்ணதாசன். இதைவிட இன்னும் எழுதுவதற்கு எதுவும் இல்லை எனச் சொல்லும் அளவுக்கு எழுதியிருக்கிறார் கண்ணதாசன்.

இவை அனைத்தையும் சிந்தித்து எழுதிட நினைத்த எனக்கு... இதனைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்று கவிஞர் வருந்துவது கண்கூடாகத் தெரிகிறது... இதைப் படிக்கிற மற்றவர்களாவது இதனை உணர்ந்து மதுவை விலக்கி வைக்க வேண்டுமென்ற நல்ல நோக்கமே.

இந்த கவிதையை கண்ணதாசன் எழுதுவதற்கு காரணமாகியிருக்கிறது.... அடிபட்டவர்களுக்குத்தானே அதன் வலி தெரியும்... அனுபவப்பட்டவர்களால் மட்டுமே அந்த வலியை விரிவாக விளக்க முடியும்...

கண்ணதாசன் எழுதியிருக்கிற அடுத்த கவிதை பொல்லாத புகையின் கொடுமை பற்றி... அதையும் என்னவென்று பார்ப்போம்.

மது அருந்தும் போது இருக்கிற பயம் புகைப் பிடிக்கும் போது இருப்பதில்லை... அதற்கு காரணம் புகைப்பது என்பது அதிகமான தீமை இல்லாதது என்று பல பேர் நினைக்கிறார்கள்... உண்மை என்னவென்றால் மதுவில் எத்தனை தீமை இருக்கிறதோ, அத்தனை தீமைகளும் இந்த புகையிலேயும் இருக்கிறது... புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பேர்கள் புகைபிடித்தவர்களே என்னும் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதனுக்கு சுவாசம் என்பது மிக மிக முக்கியம்... சுவாசத்தை சீராக இயக்குவதுதான் நுரையீரல்... அந்த நுரையீரல் கெட்டுப்போய் விட்டால் அவனது எதிர்காலம் கேள்விக்குறிதான்?. ஒருவரது இறப்பை சொல்லும் போது... மூச்சு நின்னு போச்சு என்றுதானே சொல்கிறோம். மூச்சு நின்று போனால் எல்லாமே போச்சு என்றுதானே அர்த்தம்.

புகையிலே இருக்கிற ‘நிகோடின்’ என்ற அந்த விஷம் படிப்படியாக நுரையீரல் முழுக்கப் பரவி கறையான் அரிப்பது போல உறுப்பு முழுவதையும் அரித்து விடுகிறது. எளிதாக சுவாசிக்க முடியாத போது இருமலும் சேர்ந்து கொண்டு வாட்டி வதைத்து சாவின் விளிம்புக்கே கொண்டு போய் நிறுத்தி விடுகிறது. பல பேருக்கு இருமல் என்பது எமனாகவே வந்து விடுகிறது.

இந்த அபாயத்தை கொஞ்சம் கூட உணராமல் ஸ்டைலாக புகை பிடிக்கிற இளைஞர்களே, அன்றாட வாழ்வில் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இதனையெல்லாம் கண்ணதாசன் நன்கறிந்துள்ளார். அவருக்கு கிடைத்த அனுபவத்தை எல்லாம் கவிதை வரிகளில் கொட்டித் தீர்த்துள்ளார். ஏனென்றால் அவருடைய உடல் சீர்கேடாய் போனதில் பெரும் பங்கு இந்த இருமலுக்கே உரியது... அடிக்கடி பலத்த சத்தத்துடன் அவர் இருமும் பொழுது இந்த சிகரெட் சனியனை இவர் விட்டுவிட மாட்டாரா? என்று நினைக்க தோன்றும்.

‘புகையும் பகையும்’ என்ற தலைப்பிலே அவர் எழுதியுள்ள இந்த கவிதையினை புகைப்பிடிப்போர் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டும். படிப்பதோடு அனைவரும் படித்ததை நெஞ்சிலே நிறுத்தி திருந்தவும் வேண்டும்.

இழுக்க இழுக்க வரும் இன்பம்-புகை

இறுதியிலே தரும் துன்பம் ஒழுக்கத்தை நான் சொல்லவில்லை-உடல்

உருப்பட ஓர்வழி சொல்லுகிறேன்...

உதிரத்தின் அணுக்களைக் கெடுக்கும்-பிள்ளை

உடல்வலு வில்லாமல் பிறக்கும்..

இதயத்தின் துடிப்பினைப் பெருக்கும்-புகை

இளமையில் மரணத்தை முடிக்கும்’

பிடிக்கின்ற கைகளைப் பாரு-அதில்

பெருமளவில் ஒரு கோடு

நிறத்தினில் மஞ்சளைக் காட்டும் -அந்த

நிறம்தான் உட்புறம் வாட்டும்.

படிப்பதில் இல்லாத சுகமா? -நல்ல

பழக்கத்தில் இல்லாத சுகமா?

கெடுக்கின்ற பொருள்களில் சுகத்தை-நீ

கேட்பதும் பிடிப்பதும் தகுமா?

புகைப் பிடிக்கின்றவன் இதழை-எந்தப்

பூவையரும் விரும்புவதில்லை...

பகைவரில் பெரியது புகையே-அதைப்

பார்ப்பதும் உடம்புக்குப் பகையே...

என்று கவிதையை முடிக்கிறார். கண்ணதாசன்.. புகைப்பிடிப்பதைப் பார்ப்பது கூட பாவம் என்கிறார்.

1980 வரை புகைப்பிடித்து வந்துள்ளார் கண்ணதாசன். அதற்குப்பிறகு புகைப்பதை நிறுத்திவிட்டார். இருந்தாலும் ஏற்கனவே புகைப் பிடித்ததின் தாக்கம், இருமலாக உருவெடுத்து சளியாக நெஞ்சிலே உறைந்துவிட்டது. அந்தச் சளியை வெளியேற்ற மயக்கமருந்து கொடுத்து டாக்டர்கள் எடுத்த தீவிர சிகிச்சையின் போது தான் அவர் உயிர் பிரிந்து விட்டது. இப்போதாவது புகை நமக்கு எவ்வளவு பெரிய பகை என்பதை புகைப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்த வாரம் சந்திப்போம்

Tags:    

Similar News