சிறப்புக் கட்டுரைகள்

பள்ளி, கல்லூரியில் சேருவதற்கு முன்பு இன்னம்பூர் வாங்க!

Published On 2024-05-16 15:19 IST   |   Update On 2024-05-16 15:19:00 IST
  • சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான்.
  • கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்புயம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ., தூரத்தில் இன்னம்பூர் ஆலயம் உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாணவ-மாணவிகளை கல்விக்கூடங்களில் சேர்க்கும் முன்பு கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவிலில் வழிபாடு செய்தால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.

ஏனெனில் இன்னம்பூர் ஆலய தல வரலாறு அதற்கு ஏற்ப அமைந்து உள்ளது. சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது.

உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி சோழ மன்னன் கடுமையான உத்தரவிட்டான். உடனே சுதன்மன் சரியான கணக்கு காட்டினான். என்றாலும் தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று சந்தேகத்தை போக்கினார்.

சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, "ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என சோழ மன்னன் கேட்டான். அதன்பிறகு தான் தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான்.

சுவாமிக்கு 'எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. 'அட்சரம்' என்றால் 'எழுத்து'. இது சுயம்புலிங்கம் என்பதால் 'தான்தோன்றியீசர்' என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்கு இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதி உள்ளது. நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆக இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன.

சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு 'இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் 'இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு பிறகு அது 'இன்னம்பூர்' என்று மாறிவிட்டது. பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் பள்ளியில் சேருவதற்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. 

ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது.

இதனால் அறிவுக்கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர்.

இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அனுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக் குறிக்கிறது. இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Tags:    

Similar News