செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக எனக்கு தகுதி உள்ளது- கராத்தே தியாகராஜன்

Published On 2018-07-21 07:27 GMT   |   Update On 2018-07-21 08:05 GMT
தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி தனக்கு உள்ளதாகவும் விரைவில் மாற்றம் வந்தால் தலைவர் ஆவேன் என்றும் கராத்தே தியாகராஜன் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
சென்னை:

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் அடையாறில் உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவாஜியை ராசி இல்லாதவர் என்கிறார்கள். தோற்கிற ஜானகி அம்மாள் கூட்டணியில் ராஜசேகரனும், இளங்கோவனும் தான் சேர்த்து விட்டார்கள். தோல்வி அடைந்தவுடன் சிவாஜி காங்கிரசுக்கு வந்து இருந்தால் உயர்ந்த இடத்துக்கு சென்று இருப்பார்.

இளங்கோவன் திரும்பவும் காங்கிரசுக்கு வந்து மத்திய மந்திரி ஆனார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரவில்லையா? காங்கிரஸ் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் சிவாஜி. நிறைய தலைவர்களை உருவாக்கி இருக்கிறார். கட்சி வளர்ச்சிக்காக உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

தமிழக காங்கிரசில் தொண்டர்கள் இருக்கிறார்கள். வழிகாட்டும் தலைவர்கள் சரியில்லை. திருநாவுக்கரசர் வேலை வாங்க வேண்டும். திருநாவுக்கரசர் என்னை பதவியில் இருந்து எடுத்து விடுவதாக மிரட்டுகிறார்.


முதல்-அமைச்சர் ஆகும் கனவில் அவர் இருக்கிறார். முதல்-அமைச்சராக யார் வேண்டுமானாலும் வரலாம். ப.சிதம்பரம், குமரி அனந்தன் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களுக்கு தகுதி உள்ளது. முதல்வரை தேர்வு செய்யும் தகுதி காங்கிரஸ் மேலிடத்துக்கு தான் இருக்கிறது.

கட்சிக்கு தொடர்பில்லாதவர்களும் எனக்கு ஜூனியரான செல்லக்குமார் உள்ளிட்டோரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ளனர். திருநாவுக்கரசருக்கு முதல்வராகும் தகுதி இருக்கும் போது, எனக்கும் தமிழக காங்கிரஸ் தலைவராகும் தகுதி உள்ளது. விரைவில் மாற்றம் வந்தால் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆவேன்.

திருநாவுக்கரசர் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். எனக்கு தலைவர் ராகுல், வழிகாட்டும் தலைவர் சிதம்பரம். உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. திருநாவுக்கரசர் இன்னும் காங்கிரஸ் கலாச்சாரத்திற்கே வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Congress #KarateThiagarajan #Thirunavukkarasar
Tags:    

Similar News