செய்திகள்

3 தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

Published On 2016-11-29 01:54 GMT   |   Update On 2016-11-29 08:03 GMT
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை கோட்டையில் இன்று சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை:

பொதுத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் கடந்த 22-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிசாமியை விட 23 ஆயிரத்து 661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி, தி.மு.க. வேட்பாளர் அஞ்சுகம்பூபதியை விட 26 ஆயிரத்து 874 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பி.சரவணனை விட 42 ஆயிரத்து 670 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும், அந்தந்த தொகுதியின் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள்.

இந்தநிலையில் சென்னை கோட்டையில் உள்ள சபாநாயகர் அறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகலில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 3 எம்.எல்.ஏ.க்களான செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி). ரெங்கசாமி (தஞ்சாவூர்) மற்றும் ஏ.கே.போஸ் (திருப்பரங்குன்றம்) ஆகியோருக்கு சபாநாயகர் ப.தனபால், பதவி பிரமாணம் செய்துவைக்கிறார்.

இவர்களுடன் அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

எம்.எல்.ஏ.க்களாக அவர்கள் 3 பேரும் பதவி ஏற்பதை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 136 ஆக (சபாநாயகர் உள்பட) உயர்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு 89, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒன்று என்ற அளவில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உள்ளது.

Similar News