லைஃப்ஸ்டைல்

வெளியுலகம் அறியாமலேயே நடந்தப்படும் குழந்தை திருமணங்கள்

Published On 2017-02-28 06:50 GMT   |   Update On 2017-02-28 06:50 GMT
கிராமப்புறங்களில் பெண் கல்வி கற்றால், நாலு எழுத்து படித்தால், சமூகத்தில் பொறுப்புகளைச் சுமந்தால் கவுரவம் காற்றில் பறந்துவிடும் என்ற எண்ணம் இன்றும் நிலவுகிறது.
ஒட்டுமொத்தக் குடும்பத்தின் கவுரவமும் பெண் குழந்தையின் மீதுதான் எழுதப்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. ஆண் குடிக்கலாம்; கூத்தடிக்கலாம்; அதனால் குடும்ப கவுரவம் காற்றில் பறந்து விடாது. ஆனால் பெண் கல்வி கற்றால், நாலு எழுத்து படித்தால், சமூகத்தில் பொறுப்புகளைச் சுமந்தால் கவுரவம் காற்றில் பறந்துவிடுமாம்.

கழுதையைக் காலாகாலத்தில் கட்டி வைத்துவிட்டால் நம்ம பொறுப்பு கழிந்தது என்ற எண்ணம் இன்றைக்கும் பெற்றோரிடம் நிலவுவது வியப்பளிக்கிறது. பள்ளியில் படிக்கும்போதே திருமணம் செய்து வைக்க முயலுகிறார்கள். இத்தகைய திருமணம் காதும் காதும் வைத்தவாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. பெற்றோரே நடத்தி வைக்கும் ரகசியத் திருமணங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இதை மீறிச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுத் தடுக்கப்படும் குழந்தைத் திருமணங்களே செய்தியாகி நமக்குத் தெரியவருகின்றன.



இதைவிட அதிகமான திருமணங்கள் வெளியுலகம் அறியாமலேயே நடந்து முடிகின்றன. இவ்வளவுக்கும் திருமணம் நடைபெறும் கோயில்கள், திருமண மண்டபங்கள் இங்கெல்லாம் திருமணம் நடத்துவதற்காக இடத்தை உறுதி செய்ய வரும்போதே மணப்பெண்ணின் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும் என்பது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இவை அல்லாமல் கிராமங்களில், சின்னச் சின்னக் கோயில்களில் வைத்துத் தாலி கட்டப்படும் திருமணங்கள்தான் சட்ட மீறலாக நடைபெறுகின்றன.

உள்ளூர் அளவில் உறவினர்கள் மத்தியில் நடைபெறும்போது யாரும் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. தங்கள் வசதிக்கேற்ப மணமகனைத் தேர்ந்தெடுத்துத் திருமணத்தையும் முடிக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் என்றால் அவர்கள் அனைவரின் பாடும் பெரும்பாடுதான். அதிலும் மூத்த பெண் மிகவும் பாவப்பட்டவள்.

அந்தப் பெண் பிரசவத்திலோ வேறு காரணங்களாலோ மரணமடைந்தால், இரண்டாவது பெண்ணையும் அந்த நபருக்கே மனைவியாக்குவதும் அடுத்த கட்ட நடைமுறை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்ற சென்டிமென்ட் முலாம் அதற்குப் பூசப்பட்டுவிடும்.

Similar News