லைஃப்ஸ்டைல்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை

Published On 2016-06-29 02:53 GMT   |   Update On 2016-06-29 02:53 GMT
பெரும்பாலும் தன்னம்பிக்கை இழக்கும் தருவாயில் தான் நாம் உறவிலும், வேலையிலும், வளர்ச்சியிலும் சரிவை சந்திக்கிறோம்.


gain self confidence




கருப்பாக இருப்பினும் சரி, வெள்ளையாக இருப்பினும் சரி, முகம் வடிவாக இருப்பினும் சரி, இல்லாவிடிலும் சரி நீங்கள் அழகு தான் என்பதை மனதால் நம்புங்கள். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவும் முதல் கருவி உங்களை நீங்களே உயர்வாக எண்ணுவது தான்.

எக்காரணம் கொண்டும், எந்த செயலில் ஈடுபடும் போதும், துவங்கும் போதும் எதிர்மறையாக எண்ண வேண்டாம். இது உங்கள் தன்னம்பிக்கியை கெடுக்கும் செயலாகும். எனவே, எப்போதும் நேர்மறையாக எண்ண துவங்குங்கள். தோற்றாலும் கூட அடுத்த முயற்சியில் கண்டிப்பாக வெற்றியடைய முடியும் என நம்புங்கள்.

மற்றவரிடம் பண்பாக, அன்பாக நடந்துக் கொள்ளுங்கள், கனிவாக பேசுங்கள். மற்றவர்களுக்கு உதவுங்கள். முடிந்த வரை வார்த்தை அளவிலாவது மனதுக்கு ஆறுதலாக பேசுங்கள். சமூகத்தில் உங்கள் பெயர் வளர, வளர உங்கள் தன்னம்பிக்கையும் வளரும்.

உங்களை பற்றி நீங்களாக தற்பெருமையாக பேச வேண்டாம். மேலும், மற்றவர்கள் புகழ்ந்தாலும் வானுயரத்திற்கு சென்றுவிட வேண்டாம். தன்னடக்கம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.

உங்களது திட்டங்கள், முயற்சி, செயல்பாடுகள் என அனைத்தையும் தொலைநோக்கு பார்வையில் காண துவங்குங்கள். இது நீங்கள் தோல்வியடையாமல் இருக்க உதவும்.

உங்கள் மீதும், உங்களை சுற்றி இருக்கும் உறவினர், நட்பு வட்டாரத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்காமல், உங்கள் அருகில் இருப்பவருக்கு ஏதேனும் உதவி வேண்டும் எனில் தயங்காமல் நீங்களாக சென்று உதவுங்கள்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதை எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல், எதையும் திட்டமிட்டு செய்ய தொடங்குங்கள். ஒரு தடவைக்கு பல தடவை யோசித்து களத்தில் இறங்குங்கள். மேலும், பலரிடம் ஆலோசனை பெற்று நீங்களாக ஓர் தீர்க்கமான முடிவை எடுக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியும் சரி, வெற்றியும் சரி இரண்டுமே நிலையற்றவை தான். மேகத்தை போல அவை உங்கள் வாழ்க்கையில் கடந்துக் கொண்டே இருக்கும். எனவே, எதை கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம்.

Similar News