பெண்கள் உலகம்

ஜூன் மாதத்தில் சுற்றுலா செல்ல ஏற்ற இடங்கள்

Update: 2022-06-20 03:34 GMT
  • இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய பள்ளத்தாக்கு பிரதேசம் இது.
  • ஜூன் மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கூர்க், முக்கியமானது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த மாதங்களுள் ஒன்றாக ஜூன் அமைந்திருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் குறைந்து, மழை காலம் தொடங்குவதற்கு ஆயத்தமாகும் இந்த மாதத்தில் நிலவும் சீதோஷண நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். அப்படி ஜூன் மாதத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் சிலவற்றின் பட்டியலை தொகுத்துள்ளோம்.

ஷில்லாங்: 'கிழக்கு இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப்படும் ஷில்லாங், மேகாலயா மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள், மிரள வைக்கும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அதிசயங்கள் நிரம்பப் பெற்றது. உமியம் ஏரி, அடர்ந்த மலைகள், மூன்று அடுக்கு யானை நீர்வீழ்ச்சி, அடர்ந்த வனம் என இயற்கை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. மேகாலயாவைப் பற்றி மேலும் அறிய டான் போஸ்கோ அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். அங்கு பாரம்பரிய உடைகள், பழங்கால ஆயுதங்கள் மற்றும் கலைப்பொருட்களை காணலாம்.

பந்தர்தாரா: மாறுபட்ட பயண அனுபவத்தை எதிர்பார்ப்பவர்கள் பந்தர்தாராவில் நடக்கும் மின்மினிப் பூச்சி விழாவில் கலந்துகொள்ளலாம். ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் பள்ளத்தாக்கு பகுதியில் ஒளிர்ந்து அந்த பகுதியையே பரவசத்தில் ஆழ்த்திவிடும். சற்று தொலைவில் இருந்து பார்த்தால் மின் மினிப்பூச்சிகள் கூட்டமாக குழுமி இருக்கும் சூழல் புதிய உலகத்திற்கு அழைத்து செல்லும் உணர்வை தரும். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள பந்தர்தாரா, 'புதையல்களின் பள்ளத்தாக்கு' என்றும் அழைக்கப்படுகிறது. அங்குள்ள ஆர்தர் ஏரியில் அமைதியான சூழலில் படகு சவாரியை அனுபவித்தும் மகிழலாம். சிவாஜி மலைக்கோட்டைகளுக்கு மலையேற்றம் செய்யலாம். ஆர்ப்பரித்து வரும் நீர்வீழ்ச்சியை கண்டும் ரசிக்கலாம்.

தீர்த்தன் பள்ளத்தாக்கு: இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா செல்பவர்கள் அவசியம் செல்ல வேண்டிய பள்ளத்தாக்கு பிரதேசம் இது. மலையேற்ற பயணங்களை விரும்புபவர்களின் பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிருக்கும் அழகிய வன பிரதேசமாகும். மற்ற மாதங்களை விட ஜூன் மாதத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை அனைத்து தரப்பினரையும் வரவழைத்துவிடும். பசுமையான பள்ளத்தாக்கு, மேகங்களால் சூழப்பட்ட மலைகள், அழகான ஏரிகள், அமைதியான கிராமங்கள், மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள், பழமையான கோவில்கள், சலசலக்கும் ஆறுகள் என இயற்கையின் அத்தனை அம்சங்களும் வளிமண்டலத்துடன் உறவாடி மாறுபட்ட கால நிலையை ஏற்படுத்திக் கொடுக்கும்.

சுகோ பள்ளத்தாக்கு: வட கிழக்கு மாநிலமான நாகலாந்து, மணிப்பூரின் எல்லை பகுதியில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் சொர்க்கபூரியாக அமைந்திருக்கிறது. மலையேற்றம் மீது ஆர்வம் இல்லாதவர்களை கூட மலையில் உலவ விடும் அளவுக்கு தீவிர ரசிகனாக மாற்றிவிடும். அந்த அளவுக்கு வசீகரிக்கும் இயற்கை அழகுடன் இந்த பள்ளத்தாக்கு காட்சி அளிக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீளும் அடர் பசுமை மலை தொடர்களும், அதனோடு தவழும் கார் மேகங்களும் மனதை குளிர வைத்துவிடும்.

கூர்க்: இந்தியாவில் ஜூன் மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கூர்க், முக்கியமானது. அமைதியை விரும்பும் நபர்களுக்கு ஏற்ற குடும்ப சுற்றுலா தலம் இது. கர்நாடகாவின் பசுமையான மலைகளின் பின்னணியில் அமைந்துள்ள இந்த இடம் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று குறிப்பிடப்படுகிறது. காபி பிரியர்களுக்கு சொர்க்கமாகவும் விளங்கும் இங்கு இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்கள் பார்வையிட நிறைய இடங்கள் உள்ளன. சூரிய அஸ்தமனமும், இரவில் வான் பரப்பில் நிகழும் மாயாஜாலங்களும் மனதை லயிக்க வைத்துவிடும். இன்னொரு இரவு அங்கு தங்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிவிடும்.

பச்மாரி: மத்தியப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஒரே மலைவாசஸ்தலம் பச்மாரி. சத்புரா ராணி என்றும் அழைக்கப்படும் இந்த உயரமான இடத்தில் குகைகள் ஏராளம் உள்ளன. வனவாசத்தின் போது பாண்டவர்கள் இங்கு தங்கியிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பச்மாரியில் அரிய வகை தாவர இனங்கள் ஏராளம் உள்ளன. தேனீ நீர்வீழ்ச்சி மற்றும் ரஜத் பிரதாப் நீர்வீழ்ச்சிகளின் இயற்கை பின்னணியை ரசித்து மகிழலாம். அவற்றில் குளித்தும் ஆனந்தம் அடையலாம். இங்குள்ள குகைகளுக்குள் சென்று திரும்புவது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணமாக அமையும்.

Tags:    

Similar News