பெண்கள் உலகம்

பெண்களின் மனச்சோர்வை விரட்டும் செல்லப்பிராணிகள்

Published On 2022-08-26 05:52 GMT   |   Update On 2022-08-26 05:52 GMT
  • பெண்கள் தங்களை அறியாமல் அதிகமான அழுத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றிவரும் வளர்ப்பு நாயுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

செல்லப்பிராணிகள் வளர்ப்பு பலரின் மனஅழுத்தத்தை குறைப்பதாக அமைகிறது. குறிப்பாக பெண்களுக்கு செல்லப்பிராணிகளை வளர்ப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகின்றன. இது பெண்களின் ஆரோக்கியத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

மனஅழுத்த நிவாரணம்: ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, கலாசார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. தங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை சரியாக செய்வதற்காக, பெண்கள் தங்களை அறியாமல் அதிகமான அழுத்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இது அவர்கள் மனச்சோர்வு அடைவதற்கு வழிவகுக்கிறது. செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும்போது ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் 'கார்டிசோல்' எனும் தீங்கு விளைவிக்கும் ஹார்மோன் குறைந்து, 'ஆக்சிடோசின்' எனும் மகிழ்ச்சிக்கான ஹார்மோன் அதிகமாக சுரப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வாலை ஆட்டியபடி, ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றிவரும் வளர்ப்பு நாயுடன் சிறிது நேரம் செலவிடுங்கள்.

உடற்பயிற்சிக்கான ஊக்கம்: இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் ஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். செல்லப்பிராணிகள் வளர்ப்பு, குறிப்பாக நாய்கள் வளர்ப்பது ரத்தத்தில் கொலஸ்டிரால் மற்றும் டிரை கிளிசரைடு அளவுகளைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காரணம், நாய்கள் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே இருக்கும் குணம் கொண்டவை அல்ல. எனவே அவை அவ்வப்போது வெளியில் செல்வதற்கு உங்களை கட்டாயப்படுத்தும். இதனால் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல், வெளியில் சென்று உலவுவதால் உடலுக்கு பயிற்சி கிடைக்கும். மேலும் இயற்கைவெளியில் சிறிது நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதால் ரத்த அழுத்தம் குறையும்.

பாச உணர்வு அதிகரிப்பு: செல்லப்பிராணியை பராமரிப்பதும், குழந்தையைப் பராமரிப்பதும் கிட்டத்தட்ட ஒன்றாகும். செல்லப்பிராணியை வளர்க்கும் நபர்களுக்கு இயற்கையாகவே பாச உணர்வு மேலோங்கி இருக்கும். புதுமண தம்பதிகள் குழந்தை பெறுவதற்கு முன்பு, செல்லப்பிராணிகள் வளர்ப்பது, அவர்களின் பொறுப்பு, முடிவெடுக்கும் தன்மை, பராமரிக்கும் பண்புகளை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு குழந்தை வளர்ப்பில் கைக்கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

Tags:    

Similar News