பொது மருத்துவம்

வலிப்பிற்கும் இரும்பிற்கும் சம்பந்தம் உள்ளதா?

Published On 2022-07-14 08:13 GMT   |   Update On 2022-07-14 08:13 GMT
  • முறையான சிகிச்சை பெற்றால் இதுவும் குணப்படுத்தக்கூடிய நோய்தான்.
  • வலிப்பு ஏற்படுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.

வலிப்பு நோய் அதிக அளவில் ஆபத்தைகொண்ட நோய் இல்லை. மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களில் இதுவும் ஒன்று. சர்க்கரை நோய் போன்று காலம் முழுக்க உடலோடு இந்த நோய் இருந்துகொண்டிருக்கும் என்றும் சொல்ல முடியாது. நரம்பியல் நோய் நிபுணர்கள் மூலம் முறையான சிகிச்சை பெற்றால் இதுவும் குணப்படுத்தக்கூடிய நோய்தான். சில சினிமாக்களில், வலிப்பு நோய் ஏற்பட்டு கையும் காலும் வெட்டிவெட்டி இழுப்பவர்களுக்கு இரும்பு சாவிக்கொத்தை கையில் கொடுத்ததும் வலிப்பு நின்றுவிடுவது போல் காட்சிகளை அமைத்திருப்பார்கள். விஞ்ஞானபூர்வமாக அது நிரூபிக்கப்படாத விஷயம். வலிப்பிற்கும் இரும்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அது தொடர்பான கேள்வியும்- பதிலும்:

வலிப்பு நோய் உருவாக என்ன காரணம்?

நமது இதயம் துடிப்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல் நமது மூளை நரம்பு செல்களும் தகவல்களை அனுப்ப மின்தூண்டுகைகளை செய்துகொண்டிருக்கும். சிலருக்கு இந்த மின்தூண்டுகை செயல்பாடு அளவுக்கு அதிகமாக இருக்கும். நமது மூளையின் ஒவ்வொரு பகுதியும் உடலின் வெவ்வேறு பகுதிகளை கட்டுப்படுத்துகிறது. எந்த பகுதியில் மின்தூண்டுகை மிக அதிகமாக இருக்கிறதோ, அதன் கட்டுப்பாட்டிற்குரிய உறுப்புகளில் அதன் தாக்கம் அபரிமிதமாக தோன்றும். அப்படி தோன்றுவது உடலில் பரவி வலிப்பாக மாறும். அது கை, தோள், கால் போன்றவற்றை கட்டுப்படுத்தும் பகுதியில் உருவாகி உடலின் பல பகுதிகளில் பரவி, கை- கால்களில் வலிப்பாக வெளிப்படும்.

இதன் பாதிப்பு எவ்வளவு நேரம் காணப்படும்?

சில நிமிடங்களே அந்த வலிப்பு தொடரும். பின்பு அவரே இயல்பு நிலைக்கு திரும்பிவிடுவார்.

அந்த நபரால் தனக்கு வலிப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொள்ள முடியுமா?

முடியும். அவரது மனநிலையில் இயல்புக்கு மாறான குழப்பம் ஏற்படும். பார்வை மங்கலாகும். காதுகேட்கும் திறன் குறைந்தது போலிருக்கும். பதற்றம் ஏற்பட்டு பேச்சில் தடுமாற்றம் தோன்றும். வியர்வை அதிகமாக வெளிப்படும். இந்த மாதிரியான அறிகுறிகளை உணரும்போது அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடவேண்டும்.

வலிப்பு ஏற்பட்டவர்களுக்கு நாம் உடனடியாக என்ன மாதிரியான முதல் உதவியை செய்யவேண்டும்?

வலிப்பு ஏற்படுபவர்களுக்கு உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். அது அப்படியே நுரையீரலுக்கு செல்வது உயிரிழப்பிற்கான காரணமாக அமைந்துவிடும். அதனால் உமிழ்நீர் உள்ளே போகாத அளவுக்கு அவரை ஒருக்களித்து படுக்கவைக்க வேண்டும். வலிப்பு ஏற்படும்போது அவரை மல்லாக்க படுக்கவைத்துவிடக்கூடாது. அவரது உடைகள் இறுக்கமாக இருந்தால் இலகுவாக்கி, காற்றோட்டமான சூழலை உருவாக்கவேண்டும். வலிப்பு ஏற்படுகிறவருக்கு உடல் வெட்டி வெட்டி இழுக்கும். அவரை அமுக்கிப்பிடித்து கட்டுப்படுத்த முயற்சிக்கக்கூடாது. அதே நேரத்தில் அவருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவேண்டும். அருகில் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் கிடந்தால் அப்புறப்படுத்திவிடவேண்டும். அவரது கையில் இரும்பு, சாவி போன்ற எந்த பொருளையும் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.

இதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?

மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். நோயின் தன்மையை கண்டறிய பரிசோதனைகளை நடத்துவார்கள். அதற்குரிய மருந்துகளை வழங்குவார்கள். எந்த இடத்தில் இருந்து வலிப்பு தொடங்குகிறது என்பதை கண்டறிந்து, அந்த திசுவை அகற்றும் நவீன ஆபரேஷனும் இதற்கு கைகொடுக்கும்.

Tags:    

Similar News