லைஃப்ஸ்டைல்

சீரான ஹார்மோன் சுரப்புக்கு உதவும் உணவுகள்

Published On 2018-02-10 07:53 GMT   |   Update On 2018-02-10 07:53 GMT
ஹார்மோன் சுரப்பிகளின் இயக்கம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும் என்பதால் அதைக் கருத்தில்கொண்டு உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது மகிழ்ச்சியான மனநிலை மற்றும் ஆரோக்கியத்தில், இயக்குநீர் எனப்படும் ஹார்மோன்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கவலை, கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும், நோய் பாதிப்பில் இருந்து உடலைப் பாதுகாப்பதிலும் ஹார்மோன்களின் பங்கு இருக்கிறது.

ஹார்மோன்களின் சுரப்பில் பாதிப்பு ஏற்பட்டால், நோய் தாக்கங்களும், மனநலம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படக்கூடும். எனவே, சீரான ஹார்மோன் சுரப்பு என்பது மிகவும் அவசியமானது.

ஹார்மோன் சுரப்பிகளின் இயக்கம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும் என்பதால் அதைக் கருத்தில்கொண்டு நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

எந்தெந்த உணவுகளை அன்றாடம் உட்கொண்டால் ஹார்மோன் சுரப்பு சீராக இருக்கும் எனப் பார்க்கலாம்...

ஆப்பிள் பழம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பியின் சீரான இயக்கத்துக்குத் துணைபுரியும். பெண்களுக்கு தேவைக்கு அதிகமாகச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். எனவே பெண்கள் அன்றாடம் ஆப்பிள் உண்டுவர வேண்டும்.

பாதாம் பருப்பில் நார்ச்சத்து, புரதம் ஆகியவற்றுடன், இதயத்துக்கு நலம் சேர்க்கும் ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. தினமும் நான்கு அல்லது ஐந்து பாதாம் பருப்பை நீரில் அல்லது பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம். அது கார்போஹைட்ரேட், ஹார்மோன்கள் மற்றும் சர்க்கரையின் அளவைச் சீர்படுத்தும்.



ஹார்மோன்கள் சுரப்பை சீராக்குவதற்கு ஆலிவ் ஆயிலையும் பயன்படுத்தலாம். அதிலிருக்கும் கொழுப்பு அமிலம் உடலிலுள்ள கொழுப்பின் அளவை ஒழுங்கு படுத்தி, ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கும்.

அசைவ உணவுகளில் மீன் உணவுகள் நன்மை பயக்கக்கூடியவை. அவற்றில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், மாதவிடாய் சமயங்களில் பெண்களின் உடல்நலத்துக்கு வலுச் சேர்க்கும்.

கோதுமை உணவுகளை அன்றாடம் உட்கொள்ளலாம். அவற்றில் இருக்கும் வைட்டமின் பி, பெண்களின் உடலில் ஹார்மோன் களின் அளவை வரைமுறைப்படுத்தி ஆரோக்கியம் காக்கும். கைக்குத்தல் அரிசியும் நல்லது.

ஓட்ஸ் உணவுகளையும் உண்ணலாம். அந்த உணவுகளில், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. ஆகவே, ஓட்ஸ் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஹார்மோன் களின் இயக்கமும் சீராக இருக்கும்.

நம் கண்ணுக்குத் தெரியாத உடல் உள் செயல்பாடுகளுக்கு ஆரோக்கியமான உணவு முறை அத்தியாவசியம். அத்துடன், அன்றாடம் சிறு சிறு உடற்பயிற்சிகளும் செய்துவந்தால், மருத்துவரை நாடத் தேவையில்லை.
Tags:    

Similar News