லைஃப்ஸ்டைல்

தூக்கம் வருவதை தடுக்கும் உணவுகள்

Published On 2018-02-05 07:44 GMT   |   Update On 2018-02-05 07:44 GMT
இரவில் சில உணவுகளை சாப்பிட்டால் தூக்கம் வருவது தடுக்கப்படும். தூக்கத்தை தடுக்கும் உணவுகள் என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
இரவில் தூங்கும் போது கைக்கு எட்டும் தூரத்தில் தண்ணீர் வைத்திருப்பதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இரவில் விழிப்பு வந்ததும் சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் அருந்திவிட்டு தூங்க செல்வார்கள். அப்படி இரவு நேரத்தில் தண்ணீர் பருகுவது ஆழ்ந்த தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். தூங்க செல்வதற்கு மூன்று மணி நேரத்திற்குள்ளாக அதிகமாக தண்ணீர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் ஒத்துழைக்காமல் போய்விடும்.

* கிரீன் டீயில் தியோபுரோமின், தியோபைலின் ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. அவை இதய துடிப்பை அதிகரிக்கச் செய்து, ஆழ்ந்த தூக்கத்திற்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதனால் மாலை 4 மணிக்கு பிறகு கிரீன் டீ அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

* சாக்லேட்டில் இடம்பிடித்திருக்கும் காபைன் ஆழ்ந்த தூக்கத்திற்கு அணை போட்டுவிடும். சர்க்கரை கலந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும். அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி தூக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும்.

* இரவில் காரமான உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் தூங்குவதற்கு தயாராவதற்கு ஏதுவாக உடல் வெப்பநிலை குறைய தொடங்கும். அந்த நேரத்தில் கார உணவுகளை சாப்பிட்டால் அது உடல் வெப்பநிலையை அதிகப்படுத்திவிடும். அதன் தாக்கமாக ஆழ்ந்த தூக்கத்திற்கு உடல் ஒத்துழைக்காது.

* இரவு நேரங்களில் தக்காளி சாஸ் மற்றும் ரசாயனங்கள் கலந்த பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். அதிலிருக்கும் அமிலத்தன்மை நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

* இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டும். அவை செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். தூக்கத்தை கெடுக்கும்.
Tags:    

Similar News