லைஃப்ஸ்டைல்

இதயத்திற்கு வலுசேர்க்கும் மாதுளை

Published On 2017-10-30 03:42 GMT   |   Update On 2017-10-30 03:42 GMT
இதயத்திற்கு டானிக் வேண்டும் என்று கருதுகிறவர்கள் மாதுளம் பழத்தை அன்றாடம் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.
மாதுளம் பழத்தில் சுவைமட்டுமல்ல, இதயத்திற்கு வலுசேர்க்கும் அதிக மருத்துவ குணங்களும் உள்ளன. பழங்காலத்தில் மாதுளை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சிவப்பு நிற மாதுளையின் தோல், இலை, பூ, காய், வேர், விதை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.

எளிதாக ஜீரணமாகிவிடுவது மாதுளையின் தனித்தன்மை. மலத்தில் ரத்தம் கலந்து வந்தால் அவர்கள் மாதுளை ஜூஸ் குடித்தால் நிவாரணம் கிடைக்கும். ஒரு மேஜைகரண்டி மாதுளை ஜூசில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் வாந்தி கட்டுப்படும். உடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை வெளியேற்ற மாதுளை கஷாயம் உதவும். பெரியவர்கள் என்றால் மாதுளை தோலை காய்ச்சி கஷாயம் தயாரித்து அதில் 90 முதல் 180 மி.லி. வரை பருகவேண்டும். தினமும் 3 முறை பருகலாம். சிறுவர்கள் 30 முதல் 60 மி.லி. வரை பருகவேண்டும்.



காய்ச்சலோ, வேறுவிதமான ஆரோக்கிய தொந்தரவுகளோ ஏற்படும்போது உடல் சோர்வடைந்துவிடும். அப்போது அவர்களுக்கு மாதுளை ஜூஸ் வழங்கவேண்டும். இதன் மூலம் சோர்வு நீங்கி உற்சாகம் கிடைக்கும். இதற்கு உடலை குளிரவைக்கும் ஆற்றலும் இருக்கிறது.

மாதுளையின் தோலை உலரவைத்து தூளாக்கி, அதில் சிறிதளவு உப்பும், மிளகு தூளும் கலந்து பற்களை சுத்தம் செய்தால் ஈறுகள் பலப்படும். ஈறுகளில் இருந்து ரத்தம் வழிவதும் நின்றுவிடும். மாதுளை மருந்தாக பயன்படுவது மட்டுமின்றி சிரப், ஐஸ்கிரீம், ஜெல்லி போன்றவைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மாதுளை துணைபுரிகிறது. ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதனை சாப்பிடுவது நல்லது. இதில் நிறைய தாது சத்துக்கள் இருப்பதால், ஈரலின் செயல்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிட்டு வருகிறவர்களின் ஈரலில் வைட்டமின் ஏ-யை சேகரிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். ஜீரண உறுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கும், வயிற்றுப்போக்குக்கும் மாதுளை நல்ல மருந்தாகும். நெஞ்செரிச்சல், வாந்தி வருவது போன்ற உணர்வு போன்றவைகளும் மாதுளை சாப்பிட்டால் கட்டுப்படும்.

மலதுவாரத்தை சுற்றி சொறி ஏற்பட்டு பலர் அவதிப்படுகிறார்கள். அவர்கள் மாதுளையின் தோலை எடுத்து அது கறுப்பு நிறமாகும் வரை நன்றாக வறுக்கவேண்டும். பின்பு அதனை ஆறவைத்து தூளாக்குங்கள். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து சொறி ஏற்பட்ட இடத்தில் பூசினால், அந்த தொந்தரவில் இருந்து விடுபட்டுவிடலாம். சிறுநீரகப்பை, சிறுநீரக குழாய் பகுதிகளில் கல் ஏற்பட்டு அவதிப்படுகிறவர்களுக்கும் மாதுளை நல்லது. அவர்கள் ஒரு மேஜைகரண்டி மாதுளையை அரைத்து ‘பேஸ்ட்’ போல் ஆக்கி, ஒரு கப் கொள்ளுவில் சூப் தயாரித்து அதோடு கலந்து பருகவேண்டும். மேற்கண்டவை ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடும் தகவல்களாகும்.
Tags:    

Similar News