லைஃப்ஸ்டைல்

தலைச்சுற்றலை போக்கும் ஏலக்காய்

Published On 2017-09-04 08:20 GMT   |   Update On 2017-09-04 08:20 GMT
தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்ய வல்லதும், ஜலதோஷத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைசுற்றலை போக்க கூடியதும், வயிற்று வலியை சரிசெய்ய வல்லதும், ஜலதோஷத்தை போக்கும் தன்மை கொண்டதுமான ஏலக்காயின் நன்மைகள் குறித்து காணலாம்.

பல்வேறு நன்மைகளை கொண்டது ஏலக்காய். இது, நுரையீரலை செயல்பட தூண்டுகிறது. செரிமான கோளாறுகளை போக்கி ஜீரண உறுப்புகளை முறையாக செயல்பட வைக்கிறது. இதய ஓட்டத்தை சீராக்குகிறது. சிறுநீரை பெருக்குகிறது. ஏலக்காயை பயன்படுத்தி வெயிலால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, தலைவலி, குமட்டலை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: ஏலக்காய், சீரகம், சுக்கு, தேன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதில், அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, அரை ஸ்பூன் சீரக பொடி, கால் ஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடித்துவர தலைசுற்றல், தலைவலி, வாந்தி சரியாகும்.வாசனை பொருட்களில் மிக உயர்ந்ததாக விளங்கும் ஏலக்காயின் மணம் மருந்தாகிறது. உள் உறுப்புகளை தூண்டும் தன்மை உடையது.



ஏலக்காயை பயன்படுத்தி வயிறு பொருமல், உப்புசம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:
ஏலக்காய், லவங்கம், சோம்பு, பனங்கற்கண்டு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் ஏலக்காய் பொடி, தட்டி வைத்திருக்கும் லவங்கம் மற்றும் சோம்பு கலவை, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர பசியின்மை சரியாகும். வயிற்றில் சேர்ந்த வாயுவை அகற்றும். வயிற்று வலி, வயிற்று கடுப்பு, உப்புசத்தை போக்கும். சோம்பு வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

ஏலக்காயை பயன்படுத்தி தலைவலி, ஜலதோசத்தை போக்கும் மேல்பூச்சு தைலம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: ஏலக்காய், தேங்காய் எண்ணெய், சித்தரத்தை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுக்கவும். எண்ணெய் சுடானதும் ஏலக்காய் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி, ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். மேல்பூச்சாக இந்த தைலத்தை பூசிவர தலைவலி, ஜலதோசம், மார்பு சளி குணமாகும். ஏலக்காயை அளவோடு எடுத்துக்கொள்வதால் நல்ல பயன் கிடைக்கும்.

Tags:    

Similar News