லைஃப்ஸ்டைல்

தூங்கி எழுந்ததுமே வேலை செய்யக்கூடாது

Published On 2017-05-17 02:56 GMT   |   Update On 2017-05-17 02:56 GMT
தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக்கூடாது. எழுந்தவுடன் சில நிமிடங்கள் உட்காரும்போது உடல் இயக்கி அதன் பிறகு வேலையை தொடர வேண்டும்.
அதிகாலையில் சீக்கிரமாக எழ வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் நிறைய பேர் படுக்கைக்கு செல்வார்கள். ஆனால் காலையில் எழுந்திருக்க மனமில்லாமல், அடிக்கும் அலாரத்தையும் அணைத்துவிட்டு சோம்பலுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்கள். அதிகாலையில் கண் விழிக்க நினைப்பவர்கள் அலாரத்துக்கு கட்டுப்பட நினைப்பதை விட மூளைக்கு கட்டுப்பட வேண்டும்.

வழக்கத்தை விட திடீரென்று ஒருநாள் சீக்கிரமாகவே எழுந்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் படுக்கைக்கு செல்பவர்கள், அலாரம் அடிப்பதற்கு முன்பாக சீக்கிரமாகவே எழுந்துவிடுவார்கள். மூளையின் செயல்பாடுதான் அதற்கு காரணம். சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று நாம் எண்ணுவதை மூளை உள்வாங்கி உரிய நேரத்தில் ஹார்மோன்களை சுரந்து அலாரம் அடிக்கும் முன்பே எழுந்திருக்க வைத்துவிடும்.

அதே வேளையில் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் படுக்கைக்கு செல்பவர்களிடத்தில் ஹார்மோன்கள் சுரப்பதில்லை. அதனால் எழுந்திருப்பதற்கு தாமதமாகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் எழ வேண்டும் என்பதை வழக்கமாக கொண்டிருந்தால் மூளையின் செயல்பாடும், உடல் இயக்கமும் அதற்கேற்ப அமைந்துவிடும். சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்காது.



ஆனால் வார நாட்கள் முழுவதும் சீக்கிரமாக எழுந்துவிட்டு விடுமுறை நாட்களில் எழுந்திருக்க மனமில்லாமல் அதிக நேரம் தூங்கினால் உடல் இயக்கம் பாதிக்கப்படும். மறுநாள் சீக்கிரம் எழுந்திருக்கும் மன நிலைக்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவில் தூங்கும் இடம் காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அது ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து காலையில் சீக்கிரம் எழ உதவும். அதிகாலை பொழுதும் ஆனந்தமாக மலரும். இல்லையென்றால் இரவு முழுவதும் சரியான தூக்கம் இன்றி அவதிப்பட்டு அதிகாலையில் தூக்கம் கண்களை வருடிவிடும். பின்னர் எழுந்திருப்பதற்கு தாமதமாகிவிடும். படுக்கை அறை, சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதும் விடியற்காலையில் உறக்கம் கலைந்து எழுந்திரிக்க உதவும்.

அதற்கும் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன் தான் காரணம். தூங்கி எழுந்ததுமே அலறி அடித்துக் கொண்டு வேலைகளை செய்ய ஓடக்கூடாது. ஏனெனில் உறக்கத்தில் இருக்கும் போது ரத்த ஓட்டத்தின் வேகம் மாறுபடும். எழுந்தவுடன் சில நிமிடங்கள் உட்காரும்போது உடல் இயக்கம் சீராகும். அதன் பிறகு வேலையை தொடர வேண்டும்.
Tags:    

Similar News