லைஃப்ஸ்டைல்

கால்சியம் குறைபாட்டை நீக்கும் உணவுகள்

Published On 2017-04-10 02:55 GMT   |   Update On 2017-04-10 02:55 GMT
கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டு பெரும்பாலானர்கள் அவதிப்படுகின்றனர்.
உடலுக்கு வேண்டிய சத்துகளில் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால் எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சினைகள் ஏற்படும் என்பது பழைய கதை. இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் இதனால் அவதிப்படுகிறார்கள்.

தற்போது நிறைய ஆண்கள் மூட்டு வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருப்பது தான். மேலும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சரியாக உட்கொள்ளாததும் ஒரு வகையில் காரணம் என்றாலும் எலும்பு தேயும் அளவிற்கு ஒரே இடத்தில் அமர்ந்து பணி புரிவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

100-ல் 70 சதவீத ஆண்கள் கடுமையான வேலை பார்ப்பதில்லை. எளிதாக ஏசியில் அமர்ந்த படியும், சிறிது நேரம் நடப்பதற்கு கூட சோம்பேறித்தனப்பட்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதும் தான் இந்த எலும்பு தேய்மானத்திற்கு காரணம். இந்த குறைபாட்டை நீக்க கால்சியம் உள்ள உணவுகளை மட்டும் சாப்பிட்டால் அனைத்தும் சரியாகிவிடாது. ஏனெனில் கால்சியம் உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின்-‘டி‘ சத்தும் மிகவும் அவசியமாகிறது எனவே கால்சியத்துடன் வைட்டமின்-டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.



பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் புரோட்டின் பவுடரை சேர்த்து அருந்தினால், ஒரு நாளைக்கு தேவையான கால்சிய சத்தை பெறலாம். பால் பிடிக்காதவர்கள் தயிரை சாப்பிடலாம். தயிரில் அதே கால்சியம் இருக்கிறது. முட்டை, வெண்ணெய் போன்றவற்றிலும், புரதமும், கால்சியமும் உள்ளன.

உலர் அத்திப்பழத்தில் கால்சியம், இரும்பு சத்துகள் உள்ளன. பழத்தின் இரண்டு மூன்று துண்டுகளை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இதற்கடுத்து அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது. இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால் கூடுதலான கால்சியத்தைப் பெறலாம். இறாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால் அந்த கால்சியம் சத்து போய்விடும்.

சாலமன் மீனில் ஒமேகா 3, பேட்டி ஆசிட் இருப்பதோடு இந்த மீன், கடல் நீரில் உள்ள கனிமச்சத்துகளை உறிஞ்சிக்கொள்வதால் இதனை முள்ளோடு சாப்பிடவேண்டும். இதில் கால்சியம் குறைவாக இருப்பினும், உடலுக்கு வேண்டிய மற்ற அனைத்து சத்துகளையும் பெறலாம். மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை ஆண்கள் தினமும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்கலாம்.

Similar News