லைஃப்ஸ்டைல்

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

Published On 2017-01-22 04:27 GMT   |   Update On 2017-01-22 04:27 GMT
எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான். இப்போது கலப்பட தேனை எப்படி கண்டறிவது என்று விரிவாக பார்க்கலாம்.
எளிதில் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன்தான்.  

வணிக நோக்கத்துக்காக சில நிறுவனங்கள் தேனில் வெள்ளை சர்க்கரையைக் கலந்து விற்பனை செய்து வருகின்றன.

கலப்படங்களின் விளைவாக தேனுக்கான மகத்துவமும், மருத்துவ குணமும் இல்லாமல் போகிறது. மேலும் தேனில் மற்ற சில கலப்படங்களும் நடக்கின்றன. இந்தக் கலப்படங்களைக் கண்டறிவது எப்படி, நல்ல தேனை எப்படிக் கண்டுப்பிடிப்பது போன்ற விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும்.  

* ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு சொட்டுத்தேனை விடவும். தண்ணீரில் அது கரைந்தால், அது கலப்படம் செய்யப்பட்டது. கரைந்து போகாமல் நேராக பாத்திரத்தின் கீழே சென்று தங்கினால், அது சுத்தமான தேன்.

* சுத்தமான காட்டன் துணியை தேனில் நனைத்து, அதை எரியும் தீக்குச்சியில் காண்பித்தால், நன்றாக சுடர்விட்டு பற்றி எரியும். அப்படி எரிந்தால் அது சுத்தமானது.  

* சிறிதளவு தேனை எடுத்து வாணலியில் சூடு செய்தால், அதன் அடர்த்தி குறைந்து, உருகிவிடும். பின்னர் அடுப்பை அணைத்து விடவேண்டும். சுத்தமானதாக இருந்தால், சில மணி நேரங்களானதும், பழைய அடர்த்தியை அடைந்துவிடும். கலப்படம் செய்யப்பட்டதாக இருந்தால், இழந்த அடர்த்தியைத் திரும்பப் பெறாது.

* சுத்தமான தேனுக்கு அடர்த்தி அதிகம். அதை ஸ்பூனில் எடுத்து கிண்ணத்தில் விட்டால், மெல்லிய நூல் இழை போல் இறங்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன், சொட்டு சொட்டாக வடியும்.  

சுத்தமான தேனை ஒரு பாத்திரத்தில் இருந்து மற்றொரு பாத்திரத்துக்கு மாற்றினால், அதன் அடர்த்தி காரணமாக உடனே ஒட்டாமல் குமிழ் போல பரவி, பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப தேன் சம நிலை பெற சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். கலப்படம் மிகுந்த தேனை பாத்திரத்தில் ஊற்றினால், உடனேயே தண்ணீர் போல பாத்திரத்தில் சமநிலையில் இருக்கும்.

Similar News