வழிபாடு

கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நான்கு நாட்கள் தேரோட்டம் நடக்கிறது

Published On 2023-02-25 06:23 GMT   |   Update On 2023-02-25 06:23 GMT
  • இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
  • 6-ந்தேதி திருக்கல்யாணமும், தீர்த்தவாரியும் நடக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி பந்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் தொடர்ச்சியாக மூலவர்களான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் பிரம்மோற்சவ தேர் திருவிழாவை முன்னிட்டு மலைக்குகை கோவில் எதிரே அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்திற்கு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 7 மணி அளவில் மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) சிம்ம வாகனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தங்கமயில் வாகனம். திங்கட்கிழமை நாக வாகனம், செவ்வாய்க்கிழமை அன்ன வாகனம். புதன்கிழமை யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி திருவீதி உலா நடைபெறும். மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நான்கு நாட்கள் தேரோட்டம் நடைபெறும்.

6-ந் தேதி காலை வேடபுரி உற்சவமும், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணமும், மாலை 5 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 7-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறும். அன்று மாலை ஆட்டுகிடா வாகனம் நடைபெறும்.

Tags:    

Similar News