வழிபாடு

சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் இன்று வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

Published On 2023-06-02 08:00 GMT   |   Update On 2023-06-02 08:00 GMT
  • 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
  • பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகவிழாவையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

வைகாசி விசாகத்தையொட்டி இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பர சுவாமிகள் சிறிய கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்தனர். சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றன.

குன்றத்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவில் அடி வாரத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி விளக்கேற்றி வழிபட்டனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள 8-ம் படை முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் இன்று சிறப்பு பூஜை நடை பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தரிசனம் செய்தனர்.

பாரிமுனை ராசப்பா செட்டி தெருவில் அமைந்துள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை முதல் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இன்று மாலையில் பூக்கடை பகுதியில் உள்ள தெருக்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

கீழ்க்கட்டளை பெரிய தெரு போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News